×
 

எரிவாயு தட்டுப்பாட்டிற்கு தீர்வு! ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்த இரு இந்திய LPG கப்பல்கள்!

இந்தியக் கப்பல்கள் கடந்து செல்ல ஈரான் அனுமதித்துள்ள நிலையில், ஷிவாலிக், நந்தாதேவி ஆகிய 2 இந்திய LPG டேங்கர் கப்பல்கள், ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா நோக்கி பயணித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

போர் பதற்றம் காரணமாக முடங்கிக் கிடந்த சர்வதேசக் கடல் வழிப் பாதையில், இந்தியாவிற்குச் சாதகமான ஒரு முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் இரண்டு பிரம்மாண்ட சமையல் எரிவாயு (LPG) டேங்கர் கப்பல்களான ஷிவாலிக் (Shivalik) மற்றும் நந்தா தேவி (Nanda Devi) ஆகியவை உலகின் மிக முக்கியமான நீர்ச்சந்தியான ஹார்மூஸ் ஜலசந்தியை பாதுகாப்பாகக் கடந்து இந்தியா நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளதாக இந்திய வெளியுறவு மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் காரணமாக ஹார்மூஸ் ஜலசந்திப் பகுதியை ஈரான் ராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இருப்பினும், இந்தியாவுடனான சுமூகமான உறவின் அடிப்படையில், இந்தியக் கொடி ஏந்திய LPG கப்பல்கள் மட்டும் அந்தப் பாதையைக் கடந்து செல்ல ஈரான் அரசு விசேஷ அனுமதி வழங்கியுள்ளது. இந்தியா எங்களது நண்பன் என ஈரான் தூதர் முகமது ஃபத்தாலி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த சில நாட்களாக பாரசீக வளைகுடா பகுதியில் காத்திருந்த இந்த இரு கப்பல்களும், இந்திய கடற்படையின் பாதுகாப்புடன் ஹார்மூஸ் ஜலசந்தியைச் சனிக்கிழமை அதிகாலை வெற்றிகரமாகக் கடந்துள்ளன.

இதையும் படிங்க: அமெரிக்காவிற்கு பதிலடி நிச்சயம்! போர்க்கப்பல் தகர்ப்பு குறித்து ஈரான் தளபதி ஆவேசம்!

இவை இரண்டும் சேர்ந்து மொத்தம் 92,700 மெட்ரிக் டன் LPG-யை சுமந்து வருகின்றன. இதில் நந்தா தேவி மட்டும் சுமார் 46,000 மெட்ரிக் டன் எரிவாயுவைக் கொண்டுள்ளது.

ஷிவாலிக்' கப்பல் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்திற்கு மார்ச் 16 அன்றும், நந்தா தேவி கப்பல் கண்ட்லா துறைமுகத்திற்கு மார்ச் 17 அன்றும் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரு கப்பல்களைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா வரக் காத்திருக்கும் மீதமுள்ள 22 இந்தியக் கப்பல்களும் பாதுகாப்பாகத் திரும்ப வெளியுறவு அமைச்சகம் ஈரான் அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்தியாவின் ராஜதந்திர முயற்சிக்குக் கிடைத்துள்ள இந்த வெற்றியைத் தொடர்ந்து, சிலிண்டர் விநியோகத்தைப் பாதிப்பின்றி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலவும் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு விரைவில் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாது! ஈரானின் புதிய தலைவர் மொஜ்தபா கமேனி அதிரடி அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share