×
 

போதை கும்பலை வேட்டையாடிய போலீஸ்! 64 பேர் மரணம்! 80 பேர் கைது! உச்சக்கட்ட பதற்றம்!

போதை கடத்தல் கும்பலை கைது செய்ய 2500க்கும் மேற்பட்ட பிரேசில் போலீசார் நடத்திய சோதனையின் போது நடந்த தாக்குதலில் 4 போலீசார் உட்பட 64 பேர் உயிரிழந்தனர். மேலும் 80 பேர் கைது செய்யப்பட்டனர்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் செயல்பாடுகள் அதிகரித்தன. இதைத் தடுக்க 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் திங்கள்கிழமை அதிகாலையில் பெரும் சோதனை நடத்தினர். இந்த 'அடக்குமுறை நடவடிக்கை' (Operation Containment) என்று அழைக்கப்படும் சோதனை, 'கமாண்டோ வெர்மெலோ' (Red Command) என்ற புகழ்பெற்ற போதை கடத்தல் கும்பலை இலக்காகக் கொண்டது. இந்த கும்பல், 1970களில் இருந்து பிரேசிலின் மிகப்பெரிய குற்ற அமைப்பாக இருக்கிறது. அது போதைப்பொருள் கடத்தல், பணம் பறிப்பு போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறது.

சோதனை அலெமாவோ மற்றும் பென்ஹா என்ற ஃபாவெலா (குற்றவாளிகளின் குடியிருப்புகள்) பகுதிகளில் நடைபெற்றது. இந்தப் பகுதிகளில் சுமார் 3 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். போலீசார் ஹெலிகாப்டர்கள், படை வாகனங்கள் பயன்படுத்தி உள்ளே நுழைந்தபோது, போதை கும்பல் உறுப்பினர்கள் தீவிர துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

முதல் முறையாக, போதை கும்பல் ட்ரோன் மூலம் வெடிபொருட்களை போலீஸ் குழுக்கள் மீது வீசியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்குப் பதிலடி கொடுத்த போலீசாரும் சுட்டதால், மோதல் கடுமையடைந்தது. இதில் 4 போலீசார் உட்பட குறைந்தது 64 பேர் உயிரிழந்தனர். இது ரியோவின் வரலாற்றில் மிக மோசமான போலீஸ் நடவடிக்கையாக பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: தேவர் குருபூஜை பாதுகாப்பு பணியின் போது தலைமை பெண் காவலருக்கு நேர்ந்த சோகம்... கதறும் குடும்பத்தினர்...!

மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் 81 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் 93 துப்பாக்கிகள், அரை டன் போதைப்பொருட்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். இந்த சோதனை, கும்பலின் மறைமுக டீலீங் நடக்கும் இடங்களைத் தடுக்க இந்த ஆண்டு முழுவதும் நடத்தப்பட்ட விசாரணையின் விளைவு என்று அதிகாரிகள் கூறினர். 

"இது நார்கோ-டெரரிசம் (போதை பயங்கரவாதம்) எதிரான மாநில நடவடிக்கை. இது நகரின் வரலாற்றில் மிகப்பெரியது" என்று ரியோ மாநில ஆளுநர் கிளாடியோ காஸ்ட்ரோ செய்தியாளர்களிடம் கூறினார். "குற்றங்களுக்கு எதிராக போராட, அரசு கூடுதல் உதவி தேவை" என அவர் வலியுறுத்தினார்.

இந்த மோதல் காரணமாக, பிரேசில் நகரில் பரபரப்பு நிலவுகிறது. கும்பல் பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்ற அச்சத்தால், போலீசார் எல்லா இடங்களிலும் உச்ச நிலை பாதுகாப்பு ஏற்படுத்தியுள்ளனர். சில சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. COP30 என்ற ஐ.நா. காலநிலை உச்சக்கட்டத்தை நகரம் முழுதும் ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் நேரத்தில் இது நடந்துள்ளது.

இதன் காரணமாக கல்வி நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. 46 பள்ளிகள் மூடப்பட்டன. பெடரல் பல்கலைக்கழகத்தில் சிறப்பு வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் பாதுகாப்புடன் இருக்கின்றனர் என்று கல்வித் துறை தெரிவித்தது. மனித உரிமை அமைப்புகள், "இத்தகைய போலீஸ் நடவடிக்கைகள் ஃபாவெலாவில் வசிக்கும் ஏழை மக்களை மிகவும் பாதிக்கின்றன. இறப்புகளுக்கு விரிவான விசாரணை தேவை" என்று குற்றம் சாட்டியுள்ளன.

பிரேசிலில் போதை கடத்தல் ஒரு பெரும் சவாலாக உள்ளது. 2023இல் மட்டும் 1.8 லட்சம் கோகைன் கடத்தல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த சம்பவம், அடுத்த ஆண்டு நடைபெறும் தேசியத் தேர்தலில் குற்றம் மற்றும் போதை எதிர்ப்பு முக்கிய விஷயமாக மாறும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: 2 வாரம் ரெஸ்ட்... அப்புறம்தான் ஆட்டமே இருக்கு...! வானிலை மையம் எச்சரிக்கை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share