தூக்குல போடுங்க... பெண் பிள்ளைகளை சீரழிக்கும் அவலம்... சீமான் ஆவேசம்..!!
பெண் பிள்ளைகளை சீரழிக்கும் குரூர மனம் படைத்தவர்களை தூக்கிலிட வேண்டும் என சீமான் வலியுறுத்தினார்.
பெண் குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்யும் குரூர மனம் படைத்த கொடூரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட கொடூர நிகழ்வின் சுவடு மறைவதற்குள், மதுராந்தகம் அருகே கடந்த 9 ஆம் தேதி 16 வயது சிறுமி கடத்தி செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள செய்தியும், சென்னை அடையாறில் 22 வயது கல்லூரி மாணவி கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தியும் அதிர்ச்சியையும், பெரும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது என்று கூறினார்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை நிகழாத நாளே இல்லை என்ற அளவிற்கு, ஒரே நாளில் பல்வேறு இடங்களில் பாலியல் வன்கொடுமை நிகழ்வும், பெண்களுக்குப் பாதுகாப்பற்ற பேராபத்தான சூழல் நிலவுவது வன்மையான கண்டனத்துக்குரியது என்று தெரிவித்தார். பட்டப்பகலில் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள், வீடு புகுந்து தாக்குதல், சாலையில் செல்வோர் மீது தாக்குதல், சிறு வியாபார கடைகளைத் தாக்கி உடைப்பது, வழிப்பறி உள்ளிட்ட அனைத்து வன்முறைகளுக்கும் அடிப்படையாக இருக்கும் கட்டுக்கடங்காத கஞ்சா, மது உள்ளிட்ட போதைப்பொருட்கள் புழக்கம் என மக்கள் பாதுகாப்பாக நடமாட முடியாத அளவிற்கு தமிழ்நாடு மோசமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
பள்ளி சிறுமிகள் முதல், 80 வயது பாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் பெருந்துயரங்கள் நாளும் அரங்கேறுகின்றது என்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடுநிகழ்வு நாட்டையே உலுக்கிய நிலையில், அதன் பிறகும் திமுக அரசு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்காததே கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள அவலம் நிகழ காரணமாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்பு..! தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்... தவெகவினர் கண்டன முழக்கம்..!!
மதுவை விற்கும் அரசால் குற்றங்களை எப்படி தடுத்து நிறுத்த முடியும் என்றும் பெண்களின் பாதுகாப்பில் அலட்சியமாகச் செயல்பட்டு இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட திமுக அரசு காரணமாகப்போகிறது எனவும் இதுதான் பெண்களின் வாழ்வை முன்னேற்றும் திமுக அரசின் செயல்முறையா., இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?
கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சி காலத்தில் பதியப்பட்ட போக்சோ வழக்குகள் எத்தனை? அவற்றில் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன? எத்தனை வழக்குகள் கைவிடப்பட்டன? என சரமாரி கேள்விகளை முன் வைத்துள்ளார். பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குரூர மனம் படைத்த கொடூரர்களுக்கு மரண தண்டனை விதிக்க உடனடியாக சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டுமென மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: 2 டைடல் பார்க்., 16 நியோ டைடல் பார்க்..! தொடரும் திராவிட மாடல் சாதனை..!! முதல்வர் ஸ்டாலின் உறுதி..!!