இலங்கை பெண்ணுக்கு சென்னையில் ஓட்டுரிமை! தேர்தல் அதிகாரிக்கு அமலாக்கத்துறை பரபரப்பு கடிதம்!!
இலங்கையை சேர்ந்த பெண், மோசடி வழக்கை சந்தித்து வரும் வெளிநாட்டு பிரஜை ஒருவரின் பெயர், தமிழக வாக்காளர் பட்டியலில் நான்கு ஆண்டுகளாக இடம் பெற்றுள்ள விபரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டின் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், தேர்தல் கமிஷன் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) நடைபெற்று வருகிறது. இது போலி வாக்காளர்கள், இரட்டைப் பதிவுகளை நீக்குவதற்காகவே என்று தேர்தல் கமிஷன் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தப் பணியின் போது, சென்னை விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலில் இலங்கையைச் சேர்ந்த 53 வயது பெண்ணின் பெயர் இடம்பெற்றுள்ளதாக பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. இந்தப் பெண், தடைசெய்யப்பட்ட LTTE அமைப்புடன் தொடர்புடைய மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
இலங்கையைச் சேர்ந்த மேரி பிரான்சிஸ்கா (Letchumanan Mary Franciska) என்ற பெண், 2019-ல் சுற்றுலா விசாவில் இந்தியா வந்தார். விசா காலம் முடிந்த பிறகும் சட்டவிரோதமாக இங்கு தங்கியிருந்தார். 2021 அக்டோபரில் சென்னை விமான நிலையத்தில் NIA அதிகாரிகள் மற்றும் Q பிரிவு போலீஸ் கைது செய்தனர்.
விசாரணையில், அவர் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ஆதார், PAN கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, இந்திய பாஸ்போர்ட் போன்றவற்றைப் பெற்றிருந்தது தெரியவந்தது. மேலும், டென்மார்க்கில் வசிக்கும் ஒருவரின் உதவியுடன் மும்பை வங்கிக் கணக்கில் இருந்த ரூ.42 கோடி மோசடி செய்ய முயன்றது உறுதியானது. இந்தப் பணத்தை LTTE அமைப்பை மீட்டெழுப்ப நிதியாகப் பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தார்.
இதையும் படிங்க: டெல்லி கார்வெடிப்பு!! 10 நாட்கள் என்.ஐ.ஏ கஸ்டடி!! அமீர் ரஷீத்திடம் கிடுக்குப்பிடி விசாரணை!
விருகம்பாக்கம் தொகுதி வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் 2021 முதல் இடம்பெற்றுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையும் அவர் வைத்திருந்தார். Enforcement Directorate (ED) இந்தத் தகவலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு நவம்பர் 21 அன்று அறிவித்துள்ளது.
ED-யின் கடிதத்தில், “இந்திய குடிமகன் என்று போலியாகக் காட்டிக்கொண்டு பெற்ற வாக்காளர் அட்டை இன்னும் செயல்படுகிறது. 4 ஆண்டுகளுக்கு முன்பே அவர் வெளிநாட்டு குடிமகன் என்பது தெரிந்தும், இது நீக்கப்படவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ED, வாக்காளர் அட்டை ரத்து செய்யவும், அவரது வாக்குகளை சரிபார்க்கவும் கோரியுள்ளது. NIA வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரான்சிஸ்கா, LTTE-ஐ மீட்டெழுப்ப நிதி திரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம், வாக்காளர் பட்டியலில் போலி பதிவுகள் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. தேர்தல் கமிஷன் SIR திருத்தப் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. ED, NIA, Q பிரிவு போலீஸ் ஆகியவை இந்த வழக்கைத் தொடர்ந்து விசாரிக்கின்றன. இது போன்ற போலி ஆவணங்கள் தேர்தல் மோசடிகளுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதையும் படிங்க: எங்க நாட்டுக்கு வாங்க!! சொர்க்கம் மாதிரி இருக்கும்!! இந்திய நிறுவனங்களுக்கு ஆப்கானிஸ்தான் அழைப்பு!!