வங்கதேசத்தில் தொடரும் வன்முறை!! ஓயாத அழுகுரல்!! டாக்காவில் வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் பலி!
17 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேச முன்னாள் பிரதமர் மகன் தாயகம் திரும்ப உள்ள நிலையில், டாக்காவில் நாட்டு வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவின் மகனும், பாங்க்ளாதேஷ் தேசியவாதக் கட்சி (பிஎன்பி) இடைக்காலத் தலைவருமான தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (டிசம்பர் 25, 2025) தாயகம் திரும்பினார்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளில் தலைநகர் டாக்காவில் நடந்த குரூட் பாம் (நாட்டு வெடிகுண்டு) தாக்குதலில் 21 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாரிக் ரஹ்மான் லண்டனில் இருந்து விமானம் மூலம் டாக்கா விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அவருக்கு பிஎன்பி தொண்டர்கள் லட்சக்கணக்கில் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிங்க: என்ன அவமானப்படுத்திட்டாங்க!! அதிபர் பதவியே வேணாம்?! வங்கதேச அதிபர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு
அவர் விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக புறப்படும்போது லட்சோப லட்சம் ஆதரவாளர்கள் வரிசை கட்டி நின்றனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்காக டாக்கா முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதனிடையே, நேற்று மாலை (டிசம்பர் 24) டாக்காவின் மொக்பஜார் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் இருந்து அடையாளம் தெரியாதவர்கள் நாட்டு வெடிகுண்டை வீசினர். இந்த வெடிகுண்டு சாலையில் தேநீர் கடையில் அமர்ந்திருந்த 21 வயது இளைஞர் சைபூல் சையாம் (சியாம்) என்பவரின் தலையில் பட்டு வெடித்தது.
சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த தாக்குதல் மொக்பஜார் சுதந்திர போராட்ட வீரர்கள் நினைவிடம் அருகே நடந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பீதி ஏற்பட்டது.
வங்கதேசத்தில் சமீப காலமாக தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. மாணவர் தலைவர் ஷெரீஃப் ஒஸ்மான் ஹாதி சுட்டுக்கொலை, இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் கொடூரமாக அடித்துக் கொலை உள்ளிட்ட சம்பவங்கள் நாட்டை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளன.
இந்தச் சூழலில் தாரிக் ரஹ்மான் திரும்புவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்த போதிலும், இந்த வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது போலீசாரை திகைக்க வைத்துள்ளது.
தாரிக் ரஹ்மான் ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில் பல வழக்குகளால் லண்டனில் தஞ்சம் அடைந்திருந்தார். ஹசீனா ஆட்சி வீழ்ந்த பிறகு அவர் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. அவரது தாயார் காலிதா ஜியா நோய்வாய்ப்பட்டிருப்பதும் திரும்புவதற்கு ஒரு காரணம். வரும் பிப்ரவரி மாதம் நடக்க உள்ள பொதுத் தேர்தலில் பிஎன்பி கட்சியை வழிநடத்த அவர் திரும்பியுள்ளார்.
இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கதேசத்தில் அரசியல் பதற்றம் தொடர்வதால் உலக நாடுகள் கவனித்து வருகின்றன.
இதையும் படிங்க: ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டு சிறை! புர்பச்சல் நில ஊழல் வழக்கு! குடும்பமே சிக்கியது!