×
 

குடையோட வெளில போங்க.. மார்ச் 4ம் தேதி வரை மழை இருக்காம்..!! வானிலை அப்டேட்..!!

மார்ச் 4-ந்தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய முன்னறிவிப்பின்படி, தென்னிந்தியப் பகுதிகளுக்கு மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று (பிப்ரவரி 26): தென் தமிழக மாவட்டங்கள், மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற தமிழகப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகியவற்றில் வறண்ட வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை (பிப்ரவரி 27): தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்குதொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் அண்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.

இதையும் படிங்க: உஷார் மக்களே.. நாளை முதல் மழை ஸ்டார்ட்..!! குளிரும் இருக்குமாம்..!! வானிலை அப்டேட்..!!

நாளை மறுநாள் (பிப்ரவரி 28) முதல் மார்ச் 1 வரை: மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகியவை வறண்ட நிலையிலேயே இருக்கும்.

மார்ச் 2: தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம். மற்ற இடங்களில் வறண்ட வானிலை தொடரும். மார்ச் 3: தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காரைக்கால் உள்ளிட்டவை) ஆகியவற்றில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மற்ற தமிழகப் பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட நிலை நீடிக்கும். மார்ச் 4: மீண்டும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற பகுதிகளில் வறண்ட வானிலைதான்.

இதற்கிடையே, இன்று முதல் மார்ச் 2 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பான அளவிலேயே இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் நிலவ வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவிலும் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை: இன்று தெற்கு அந்தமான் கடலின் சில பகுதிகள், தென்கிழக்கு வங்காள விரிகுடாவின் பெரும்பாலான பகுதிகள், அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35-45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: குளுகுளுனு இருக்கப்போகுது சென்னை..!! பனிமூட்டம் தொடருமாம்..!! வானிலை அப்டேட்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share