8,700 கி.மீ. வேகத்தில் நிலவில் மோதிய ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்!! 18 மீட்டர் அகலத்தில் உருவான பிரம்மாண்ட பள்ளம்!
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட்டின் ஒரு பாகம், மணிக்கு 8,700 கிலோ மீட்டர் வேகத்தில் நிலவில் மோதியது. இதனால், மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட்டின் இரண்டாம் அடுக்கு பாகம் நிலவின் மேற்பரப்பில் அதிவேகமாக மோதியதால், அங்கு மிகப்பெரிய பள்ளம் உருவாகியிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் விண்வெளி ஆராய்ச்சி உலகில் புதிய கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், பயர்ப்ளை ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் லேண்டரை நிலவுக்கு அனுப்புவதற்காக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் பயன்படுத்தப்பட்டது. அந்த பயணத்தின் போது, ராக்கெட்டின் இரண்டாம் அடுக்கு பாகம் தனது பணியை முடித்த பிறகு பூமிக்குத் திரும்பாமல் விண்வெளியிலேயே சுற்றிக்கொண்டிருந்தது.
சுமார் 4 டன் எடை கொண்ட அந்த ராக்கெட் பாகம், எரிபொருள் முழுவதும் தீர்ந்த நிலையில் ஒரு ஆண்டுக்கும் மேலாக விண்வெளியில் கட்டுப்பாடின்றி மிதந்தது. பின்னர் ஈர்ப்பு விசையின் காரணமாக அதன் பாதை மாறி, மணிக்கு சுமார் 8,700 கிலோமீட்டர் வேகத்தில் நிலவின் மேற்பரப்பில் மோதியதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆகஸ்ட் 12-ல் வானில் அரிய அதிசயம்!! 4 மணி நேரம் நீடிக்கும் சூரிய கிரகணம்!! நேரலையில் ஒளிபரப்பும் நாசா!
இந்த மோதலால் சுமார் 18 மீட்டர் அகலமும், 4 மீட்டர் ஆழமும் கொண்ட புதிய பள்ளம் உருவாகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். நிலவில் வளிமண்டலம் இல்லாததால், இதுபோன்ற மோதல்கள் நேரடியாக அதன் மேற்பரப்பில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்வெளிக் கழிவுகள் நிலவில் மோதுவது இது முதல் சம்பவம் அல்ல. 2022-ஆம் ஆண்டில் சீன ராக்கெட்டின் ஒரு பாகமும் நிலவில் மோதியது. அதேபோல், நிலவின் தூசி, நில அதிர்வு மற்றும் மேற்பரப்பு மாற்றங்களை ஆய்வு செய்வதற்காக நாசா தனது சில ராக்கெட் பாகங்களை திட்டமிட்டு நிலவில் மோதவிட்ட சம்பவங்களும் உள்ளன.
தற்போது இந்த புதிய மோதல் ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டுள்ளது. மோதலுக்கு முன் எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படங்களையும், தற்போது எடுக்கப்படும் புதிய படங்களையும் ஒப்பிட்டு, மேற்பரப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆய்வு, எதிர்கால நிலவு ஆய்வுகள் மற்றும் மனிதர் செல்லும் விண்வெளி திட்டங்களுக்கு முக்கிய தகவல்களை வழங்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இதையும் படிங்க: விண்வெளி நிலையத்தை சென்றடைந்தார் இந்திய வம்சாவளி வீரர் அனில் மேனன்... 8 மாதங்கள் நடக்கப்போகும் முக்கிய ஆய்வு!