வேணாம்னா வெளியே போங்க!! வேஸ்டானது ராகுல் கடிதம்!! காங்.,யிடம் கறார் காட்டும் மு.க.ஸ்டாலின்!
ராகுல் காந்தி எழுதிய கடிதத்தை படித்ததும் கோபமடைந்த முதல்வர் ஸ்டாலின், அக்கட்சியின் பொதுச்செயலர் வேணுகோபாலிடம், 'விரும்பினால் கூட்டணியில் இருந்து வெளியேறலாம்' என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் தி.மு.க.வும் காங்கிரஸும் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளது. ராகுல் காந்தி அனுப்பிய கடிதத்தைப் படித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் கோபமடைந்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபாலிடம் கடுமையாகப் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தி.மு.க. சார்பில் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக்கு 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் மற்றும் சத்தீஸ்கர் முன்னாள் துணை முதல்வர் டி.எஸ். சிங் தியோ ஆகியோர் சென்னை வந்து முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது ராகுல் காந்தி கொடுத்தனுப்பிய கடிதத்தை வேணுகோபால் ஸ்டாலினிடம் அளித்தார்.
அந்தக் கடிதத்தில் ஆட்சியில் பங்கு, 32 தொகுதிகள், ராஜ்யசபா இடம் உள்ளிட்ட பல கோரிக்கைகள் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. கடிதத்தைப் படித்த ஸ்டாலின் அதிர்ச்சியடைந்து, கனிமொழி மூலம் வேணுகோபாலிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க: திரும்பும் பக்கமெல்லாம் தீராத தலைவலி! தமிழகம், கேரளாவிலும் சிக்கல்! ராகுல்காந்தி அப்செட்!
ஸ்டாலின் கூறியதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிப்பது: காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தரவு பகுப்பாய்வுத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, எம்.பி. மாணிக்கம் தாகூர் போன்றோரின் கருத்துகள் கூட்டணி தர்மத்துக்கு எதிரானவை.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தி.மு.க. தனித்து போட்டியிட்டாலும் ஆட்சியைப் பிடிக்கும் வலிமை கொண்டது. ஆனால், பா.ஜ.க.வை தமிழகத்தில் நுழைய விடாமல் தடுக்கவே மதசார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளோம் என்றார்.
மேலும், காங்கிரஸ் தரப்பு விமர்சனங்கள் தி.மு.க.வினர் முழுமனதுடன் வேலை செய்ய மாட்டார்கள் என்பதை உணர வேண்டும். பெரும்பான்மை கிடைக்காவிட்டால் மட்டுமே கூட்டணி ஆட்சி பற்றி பேச வேண்டும். இப்போது குழப்பம் ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.
பல மாநிலங்களில் காங்கிரஸ் மாநிலக் கட்சிகளுடன் முரண்டதால் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது. அதே நிலை தமிழகத்திலும் வருமோ என்ற அச்சம் உள்ளது. த.வெ.க.வுடன் கூட்டணி என்று மிரட்டினாலும் அஞ்ச மாட்டோம். காங்கிரஸுக்கு 22 தொகுதிகள் வரைதான் கொடுக்க முடியும். ராஜ்யசபா இடம் பற்றி பின்னர் பேசலாம் என்று காட்டமாகக் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர் கிரிஷ் சோடங்கர் கனிமொழியை சந்தித்து விவரங்களை ராகுலுக்கு அனுப்பினார். வேணுகோபால் திருவனந்தபுரம் சென்று, "பேச்சு சுமுகமாக இருந்தது. தி.மு.க. முடிவுக்காக காத்திருக்கிறோம்" என்றார். கிரிஷ் சோடங்கர் கூறுகையில், ராஜ்யசபா, உள்ளாட்சி தேர்தல் விவகாரங்கள் சுமுகமாக இருந்தன. தொகுதி பங்கீட்டில் இன்னும் இறுதி முடிவு இல்லை. அதிக தொகுதிகள் கேட்டுள்ளோம். இரு தரப்பு குழுக்களும் பேசும் என்றார்.
இரு கட்சிகளுக்கும் இடையேயான இந்த முரண்பாடு தேர்தல் கூட்டணியை பாதிக்குமா என்பது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அச்சமில்லை! அச்சமில்லை!! காங்., எம்.பி கறார்! திமுக கூட்டணிக்கு ஆட்டம் காட்டும் மாணிக்கம் தாகூர்!