×
 

கர்நாடகாவில் உயரும் மதுபானங்களின் விலை..!! மே 1ம் தேதி முதல் அமல்..!! 'குடி'மகன்கள் ஷாக்..!!

கர்நாடகத்தில் புதிய விலை உயர்வு மே மாதம் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என அரசு அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் மதுபானங்களின் விலை நிர்ணயம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. உற்பத்தியாளர்கள் அறிவிக்கும் அடிப்படை விலையின் அடிப்படையில் அரசு அதிகபட்ச சில்லரை விலையை (எம்.ஆர்.பி.) நிர்ணயம் செய்து வந்தது. இந்த முறையில் மதுபானங்கள் 16 அடுக்குகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு கலால் வரி விதிக்கப்பட்டு வந்தன.

காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றதிலிருந்து கடந்த மூன்று ஆண்டுகளில் மதுபான விலை ஐந்தாவது முறையாக உயர்த்தப்பட உள்ளது. அரசின் வருவாயில் கலால் வரி முக்கியப் பங்கு வகிக்கிறது. ஐந்து உத்தரவாத திட்டங்களுக்கான நிதிச் சுமை காரணமாக, நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு மதுபான வரியை அடிக்கடி உயர்த்தி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

2025 மே மாதம் இந்திய தயாரிப்பு மதுபானங்களின் (ஐ.எம்.எஃப்.எல்) விலை ரூ.10 முதல் ரூ.45 வரை உயர்த்தப்பட்டபோது மதுப்பிரியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில், 2026-27 நிதியாண்டு பட்ஜெட்டில் மாநில அரசு புதிய மதுபான கொள்கையை அறிவித்தது. நாட்டிலேயே முதன்முறையாக ஆல்கஹால் இன் பெவரேஜ் (ஏ.ஐ.பி.) முறையை அறிமுகப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: கர்நாடகாவில் இந்தி கட்டாயம் இல்லை! 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்!

இதன்படி, மதுபானத்தில் உள்ள ஆல்கஹால் அளவு (ஏ.பி.வி. – Alcohol By Volume) அடிப்படையில் வரி விதிக்கப்படும். அதிக ஆல்கஹால் உள்ள மதுபானங்களுக்கு அதிக வரியும், குறைந்த ஆல்கஹால் உள்ளவற்றுக்கு ஒப்பீட்டளவில் குறைவான வரியும் விதிக்கப்படும். தற்போதைய 16 அடுக்குகளுக்கு பதிலாக 8 அடுக்குகளாகக் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு பிறப்பித்த அரசாணையின்படி, புதிய கொள்கையால் மதுபானங்கள் மீதான வரி சுமார் 20 சதவீதம் உயரும். சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் குறைந்த விலை இந்திய தயாரிப்பு மதுபானங்களின் (விஸ்கி, ரம், பிராந்தி, ஜின் போன்றவை) விலை கணிசமாக அதிகரிக்கும். குவார்ட்டர் (180 மில்லி) அளவுக்கு ரூ.15 முதல் ரூ.25 வரை உயர்வு ஏற்படலாம். உதாரணமாக, ரூ.80க்கு விற்கப்படும் மதுபானம் ரூ.95 ஆகவும், ரூ.95க்கு விற்கப்படும் மதுபானம் ரூ.110 ஆகவும், ரூ.120க்கு விற்கப்படும் மதுபானம் ரூ.135 ஆகவும், ரூ.150க்கு விற்கப்படும் மதுபானம் ரூ.170 ஆகவும் மாறலாம்.

முழு பாட்டில் (750 மில்லி) விலை ரூ.50 முதல் ரூ.100 வரை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. உணவகங்கள் மற்றும் பார்களில் சேவைக் கட்டணம் சேர்க்கப்படுவதால் உண்மையான செலவு இன்னும் அதிகமாகலாம். மறுபுறம், உயர்தர இறக்குமதி மதுபானங்கள் (பிளாக் டாக், பிளாக் அண்ட் ஒயிட், ஸ்காட்ச் போன்றவை) விலை 5 முதல் 15 சதவீதம் வரை குறையக்கூடும். ஆனால், டி.எஸ்.பி. பிளாக் டீலக்ஸ் போன்ற குறைந்த விலை இறக்குமதி பிராண்டுகளின் விலை 11 முதல் 16 சதவீதம் உயரும்.

பீர் வகைகளிலும், குறிப்பாக அதிக ஆல்கஹால் அளவு கொண்ட பீர்களின் விலை சிறிது உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், குறைந்த ஆல்கஹால் பீர்கள் மற்றும் ஒயின் போன்றவற்றுக்கு வரி சுமை குறையும் வாய்ப்பு உள்ளது. இந்த புதிய விலை உயர்வு மே 1 முதல் அமலுக்கு வரும் என அரசு அறிவித்துள்ளது. இந்த மாற்றம் மாநிலத்தின் கலால் வருவாயில் 80 சதவீதத்தை பங்களிக்கும் முதல் நான்கு அடுக்குகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மதுப்பிரியர்கள் ஏற்கெனவே தொடர் விலை உயர்வுகளால் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்தப் புதிய கொள்கை மதுபான உற்பத்தியாளர்களுக்கு சில சுதந்திரத்தை அளிக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால், நிதி நெருக்கடியால் சாமானியர்களின் பாக்கெட்டுக்கு மேலும் சுமை ஏற்படும் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அரசு வருவாயை அதிகரிக்கும் நோக்கில் இந்த மாற்றத்தை கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
 

இதையும் படிங்க: கர்நாடகாவில் கோர சம்பவம்: பேருந்து மீது நேருக்கு நேர் மோதிய கார்..!! 6 பேர் பரிதாப பலி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share