காலக்கெடு விவகாரம்!! ஜனாதிபதியின் 14 கேள்விகளும்! சுப்ரீம் கோர்ட்டின் பதில்களும்! முழு விவரம்!
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு ஜனாதிபதி, கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயம் செய்தது தொடர்பான தீர்ப்பை தொடர்ந்து, 14 கேள்விகளை சுப்ரீம் கோர்ட்டில் ஜனாதிபதி எழுப்பியிருந்தார். இந்த கேள்விகளுக்கு இன்றைய தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட் பதில் அளித்துள்ளது.
கடந்த ஆண்டு தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் மசோதாக்களை கவர்னர்களும் ஜனாதிபதியும் நீண்ட நாள் தொடர்ந்து நிலுவையில் வைத்திருந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு அளித்தது. அதைத் தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 கேள்விகளை உச்ச நீதிமன்றத்தில் எழுப்பினார். அந்த 14 கேள்விகளுக்கும் இன்று உச்ச நீதிமன்றம் தெளிவான பதில்களை அளித்துள்ளது.
கேள்வி.1: கவர்னரிடம் மசோதா வந்ததும் அவருக்கு என்ன என்ன வாய்ப்புகள் உள்ளன?
பதில்: மூன்று வாய்ப்புகள் மட்டுமே உள்ளன.
- ஒப்புதல் கொடுக்கலாம்
- நிறுத்தி வைத்து சட்டசபைக்கு திருப்பி அனுப்பலாம்
- ஜனாதிபதிக்கு அனுப்பலாம்
நான்காவது வழியாக “திருப்பி அனுப்பாமல் தன்னிடமே வைத்திருப்பது” என்ற வாய்ப்பு கிடையாது. திருப்பி அனுப்பாமல் கவர்னர் வைத்திருந்தால் அது அரசியல் சட்ட விரோதம்.
கேள்வி.2: மசோதா விஷயத்தில் கவர்னர் அமைச்சரவை ஆலோசனைக்கு கட்டுப்பட்டவரா?
பதில்: பொதுவாக அமைச்சரவை ஆலோசனைப்படி செயல்பட வேண்டும். ஆனால் மசோதா ஒப்புதல் விஷயத்தில் கவர்னருக்கு சிறப்பு அதிகாரம் உள்ளது. அதனால் திருப்பி அனுப்பவோ, ஜனாதிபதிக்கு அனுப்பவோ தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம்.
இதையும் படிங்க: ஆப்ரிக்க நாடுகளுக்கு ஜனாதிபதி முர்மு சுற்றுப்பயணம்! அங்கோலாவில் சிவப்பு கம்பள உற்சாக வரவேற்பு!
கேள்வி.3: கவர்னருக்கு உள்ள இந்த தனி அதிகாரம் ஏற்றுக்கொள்ளத்தக்கதா?
பதில்: முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால் எந்தக் காரணமும் இல்லாமல் நீண்ட காலம் மசோதாவை நிலுவையில் வைத்திருந்தால், நீதிமன்றம் “முடிவு எடுக்க கோரி” உத்தரவிடலாம்.
கேள்வி.4: கவர்னருக்கு 361-வது பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள தனி பாதுகாப்பு, நீதிமன்ற விசாரணைக்கு தடையாக உள்ளதா?
பதில்: இல்லை. கவர்னருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு இருந்தாலும், கவர்னர் பதவி நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டது. நீண்ட காலம் மசோதாவை நிலுவையில் வைத்திருந்தால் நீதிமன்றம் தலையிட முடியும்.
கேள்வி.5:அரசியல் சட்டத்தில் காலக்கெடு இல்லாதபோது நீதிமன்றம் காலக்கெடு விதிக்க முடியுமா?
கேள்வி.6: ஜனாதிபதிக்கு 201-வது பிரிவின்படி உள்ள தனி அதிகாரம் ஏற்றுக்கொள்ளத்தக்கதா?
கேள்வி.7: ஜனாதிபதிக்கும் காலக்கெடு விதிக்க முடியுமா?
இந்த மூன்று கேள்விகளுக்கும் ஒரே பதில்:
அரசியல் சட்டம் கவர்னருக்கும் ஜனாதிபதிக்கும் நெகிழ்வுத்தன்மை அளித்துள்ளது. இந்தியா போன்ற பெரிய கூட்டாட்சி நாட்டில் பல சூழல்களை கருத்தில் கொண்டே இந்த நெகிழ்வு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே காலக்கெடு விதிப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. கவர்னருக்கோ ஜனாதிபதிக்கோ நீதிமன்றம் காலக்கெடு விதிக்க முடியாது.
கேள்வி.8: கவர்னர் மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பினால், ஒவ்வொரு முறையும் ஜனாதிபதி உச்ச நீதிமன்ற ஆலோசனை கேட்க வேண்டுமா?
பதில்: இல்லை. தேவை என்று ஜனாதிபதி நினைத்தால் மட்டும் கேட்கலாம். கட்டாயம் இல்லை.
கேள்வி.9: மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பே நீதிமன்றம் விசாரிக்க முடியுமா?
பதில்: முடியாது. சட்டமாக மாறிய பிறகு மட்டுமே விசாரிக்க முடியும்.
கேள்வி.10: கவர்னர் ஒப்புதல் தராவிட்டால் மசோதா தானாக சட்டமாகுமா?
பதில்: கண்டிப்பாக இல்லை. கவர்னர் ஒப்புதல் இல்லாமல் சட்டமாக முடியாது.
கேள்வி.11: கவர்னர் ஒப்புதல் தராமல் மசோதாவை சட்டமாக்க முடியுமா?
பதில்: முடியாது. கவர்னர் ஒப்புதல் கட்டாயம்.
கேள்வி.12: உச்சநீதிமன்றத்தின் ஒரு பெஞ்ச் தனக்கு முன் வந்துள்ள ஒரு வழக்கில், அரசியல் சட்டத்தின் 145 (3)ன் படி, அரசியல் சட்டம் தொடர்பான பல விதமான கேள்விகள் எழும்போது, குறைந்தபட்சம் 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்பது கட்டாயமா?
பதில்; இந்தக் கேள்வி பொருத்தமானதல்ல என்பதால் பதிலளிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டது.
கேள்வி.13: அரசியல் சட்டத்தின் 142வது பிரிவின் படி, உச்சநீதிமன்றத்தின் அதிகாரங்கள், நடைமுறை சட்டத்திற்கு மட்டும் உட்பட்டவையா அல்லது அமலில் இருக்கும் அரசியல் சட்ட நடைமுறைகளுக்கு முரண்பட்ட, குறைபாடான உத்தரவுகளை பிறப்பிக்க வழி செய்கிறதா?
பதில்: கேள்வி 10ன் ஒரு பகுதியாக பதிலளிக்கப்பட்டது.
கேள்வி.14: மத்திய அரசிற்கும், மாநில அரசுகளுக்கும் இடையிலான விவகாரத்தில், அரசியல் சட்டத்தின் 131வது பிரிவின்படி சிறப்பு வழக்கு தொடுப்பதை தவிர, உச்சநீதிமன்றத்திற்கு உள்ள அதிகார வரம்பை ஏதாவது வகையில், அரசியல் சட்டம் தடுக்கிறதா?
பதில்: பொருத்தமற்றது என்பதால் இந்த கேள்விக்கு பதில் அளிக்கப்படவில்லை.
12-14 கேள்விகள் பொருத்தமற்றவை என்று நீதிமன்றம் கருதியதால் பதில் அளிக்கப்படவில்லை.
முக்கிய சுருக்கம்:
- கவர்னரும் ஜனாதிபதியும் எப்போது வேண்டுமானாலும் முடிவு எடுக்கலாம்; காலக்கெடு கிடையாது.
- ஆனால் காரணம் இல்லாமல் நீண்ட நாள் நிலுவையில் வைத்தால் நீதிமன்றம் தலையிட முடியும்.
- “தானாக ஒப்புதல்” (deemed assent) என்ற கருத்தை உச்ச நீதிமன்றம் முழுமையாக நிராகரித்துவிட்டது.
இந்தத் தீர்ப்பால் இனி கவர்னர்களும் ஜனாதிபதியும் மசோதாக்களை நியாயமான காலத்திற்குள் முடிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கெத்து காட்டும் ஜனாதிபதி! ரபேல் விமானத்தில் பறந்தார் திரவுபதி முர்மு!