×
 
☰

அமெரிக்க தொடக்கப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு... 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு...!

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை தொடர்ந்து பெரும் சமூகப் பிரச்சினையாக இருந்து வருகிறது.

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் உள்ள பெண்ட் நகரில் அமைந்துள்ள பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் மூன்று குழந்தைகள் மற்றும் ஓர் ஆசிரியர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பெண்ட் காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஷீலா மில்லர் கூறுகையில், முதலில் ஒரு காரை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து சில நிமிடங்களில் பள்ளிக்குள் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகப் பல அவசர அழைப்புகள் வந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணியளவில் தகவல் கிடைத்த சில நிமிடங்களிலேயே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக வானொலி வாயிலாகத் தகவல் பரவியது. இருப்பினும், அவரைச் சுட்டது யார் என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றும், பொதுமக்களில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் என்றும் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஈரான் மீதான போரை நிறுத்துக! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்!

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த குழந்தைகள் 5, 8 மற்றும் 11 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. காயமடைந்தவர்களில் குறைந்தது இருவர் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் உடல்நிலை குறித்த முழுமையான விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர் 16 வயது சிறுவன் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தாலும், காவல்துறை இதனை உறுதிப்படுத்தவில்லை.

பெண்ட் நகரில் உள்ள சில்வர் ரெயில் தொடக்கப் பள்ளியில் சுமார் 400 முதல் 450 மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும், 40-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளி உடனடியாகக் காலி செய்யப்பட்டது. அங்கிருந்த மாணவர்கள் பேருந்துகள் மூலம் பாதுகாப்பான மற்றொரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனிடையே, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கவலையுடன் காத்திருந்தனர்.

தனது மகன் பாதுகாப்பாக இருப்பதாக நம்புவதாக ட்ரூ ஷார்ப் என்பவர் சிபிஎஸ் நியூஸ் ஊடகத்திடம் தெரிவித்தார். அவரது மகன் ஐந்தாம் வகுப்பில் படித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இந்தச் சம்பவம் குறித்து பெண்ட்-லா பைன் பள்ளி மாவட்டக் கண்காணிப்பாளர் ஸ்டீவன் குக் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இரங்கல் தெரிவித்த அவர், தங்களது துயரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, அப்பள்ளி மாவட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகள் மூடப்பட்டன. போர்ட்லேண்ட் நகரத்திலிருந்து தென்கிழக்கே சுமார் 170 மைல் தொலைவில் அமைந்துள்ள சில்வர் ரெயில் தொடக்கப் பள்ளியில் மழலையர் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்குக் கல்வி வழங்கப்படுகிறது.

அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி கலாச்சாரம்: 

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை தொடர்ந்து பெரும் சமூகப் பிரச்சினையாக இருந்து வருகிறது. துப்பாக்கிகள் எளிதில் கிடைப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அங்கு ஆண்டுதோறும் ஏராளமானோர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் உயிரிழக்கின்றனர்.

அமெரிக்காவின் வரலாற்றில் மிகக் கொடூரமான கல்வி நிறுவனத் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஒன்றாக, 2007 ஏப்ரல் 16-ஆம் தேதி வர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தாக்குதல் குறிப்பிடப்படுகிறது. அப்போது தென்கொரியாவைச் சேர்ந்த மாணவர் சியுங்-ஹுய் சோ நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 32 பேர் கொல்லப்பட்டனர்; 17 பேர் காயமடைந்தனர். பின்னர் அவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்தார்.

அமெரிக்காவில் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை இலக்காகக் கொண்டு நடைபெறும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் குறித்த விவாதங்களைத் தொடர்ந்து எழுப்பி வருகின்றன.

இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தி இனி "டிரம்ப் ஜலசந்தி"!! பரபரப்பை கிளப்பிய டிரம்ப்!! ஈரானின் கோரிக்கை நிராகரிப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share