மிஸ் பண்ணிடாதீங்க..!! பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்கலையா..?? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு..!!
தமிழகத்தில் பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்காமல் விடுபட்டவர்களுக்கு உதவும் வகையில், அதற்கான கால அவகாசத்தை 2026 செப்டம்பர் 26-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாததால் கல்வி, வேலைவாய்ப்பு, ஆதார், பாஸ்போர்ட் உள்ளிட்ட அடிப்படை சேவைகளைப் பெற முடியாமல் தவித்து வரும் ஆயிரக்கணக்கானோருக்கு தமிழக அரசு மிகுந்த நம்பிக்கை அளிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழில் பெயரைச் சேர்க்கும் சிறப்பு அவகாசத்தை 2026 செப்டம்பர் 26-ஆம் தேதி வரை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டித்து மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ப.செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
பொதுவாக, குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதங்களுக்குள் எவ்விதக் கட்டணமும் இன்றி பெயரைச் சேர்த்துக் கொள்ளலாம். அதன் பிறகு 15 ஆண்டுகள் வரை ரூ.200 தாமதக் கட்டணத்துடன் பெயர் சேர்க்கும் வசதி உள்ளது. ஆனால், 15 ஆண்டுகளைக் கடந்துவிட்டால் சாதாரண சட்ட விதிகளின்படி பெயர் சேர்க்க முடியாது. இதனால் குறிப்பாக 2000-ஆம் ஆண்டுக்கு முன்பு பிறந்தவர்கள் மற்றும் பிறகு பிறந்து 15 ஆண்டுகள் கடந்தவர்கள் பலரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதையும் படிங்க: மாடுகளுக்கும் மைக்ரோ சிப்... மார்ச் 18 வரைக்கும் தான் டைம்..! கெடு விதித்த சென்னை மாநகராட்சி...!
இந்நிலையில், முன்னதாக 2000-க்கு முன்பு பிறந்தவர்களுக்கும், அதன் பிறகு 15 ஆண்டுகள் கடந்தவர்களுக்கும் சிறப்பு சலுகையாக வழங்கப்பட்ட அவகாசம் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்திருந்தது. இந்திய தலைமை பிறப்பு-இறப்பு பதிவாளரின் பரிந்துரையை ஏற்று, தமிழக அரசு இப்போது இந்த அவகாசத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டித்துள்ளது.
இதன்படி, 2026 செப்டம்பர் 26 வரை அனைவரும் எந்த வயது வரம்பும் இல்லாமல் தங்கள் பிறப்புச் சான்றிதழில் பெயரைச் சேர்த்துக் கொள்ளலாம். இது இறுதி வாய்ப்பு என அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், இந்த அவகாசத்தில் கோர்ட்டுக்கு செல்ல வேண்டிய அல்லது வட்டாட்சியர் ஒப்புதல் பெற வேண்டிய சிக்கல்கள் தேவையில்லை. எளிய நடைமுறையில் நகராட்சி, பேரூராட்சி அல்லது ஊராட்சி அலுவலகத்தில் உள்ள பிறப்பு-இறப்பு பதிவாளரை அணுகி விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பப் படிவத்துடன் பெற்றோரின் அடையாள ஆவணங்கள், பழைய பிறப்பு பதிவின் நகல் போன்ற ஆவணங்கள் தேவைப்படும். நேரில் செல்ல இயலாதவர்கள் ஆன்லைன் வசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாம். பிறப்புச் சான்றிதழ் என்பது ஒருவரின் அடையாளத்தின் அடிப்படை ஆவணம். இதன்மூலம் கல்வி, வேலை, அரசு சலுகைகள், வாக்காளர் அட்டை உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெற முடியும்.
எனவே, இந்த சிறப்பு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. இந்த உத்தரவு குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் விரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நீட்டிப்பு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பெயர் சேர்க்கப்படாமல் தவித்து வருபவர்கள் இந்த அவகாசத்தைப் பயன்படுத்தி தங்கள் ஆவணங்களை முழுமைப்படுத்திக் கொள்ளலாம்.
இதையும் படிங்க: ஒரே இடத்தில் 20 கல்குவாரிகள்..! பாழாகும் இயற்கை..! அதிர்ச்சியூட்டும் காட்சிகள்..!