×
 

வாக்களிக்க செல்லும் மக்களுக்காக 11,323 சிறப்பு பேருந்துகள்! போக்குவரத்து துறை சிறப்பு ஏற்பாடு!

தேர்தலை முன்னிட்டு இன்றிரவு முதல், ஏப்.23 வரை மொத்தம் 11,323 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நாளை மறுதினம் (ஏப்ரல் 23, வியாழக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாகப் போக்குவரத்துத் துறை விரிவான சிறப்புப் பேருந்து வசதிகளை அறிவித்துள்ளது. இன்றிரவு முதல் ஏப்ரல் 23-ஆம் தேதி வரை மொத்தம் 11,323 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் சேர்த்து, கூடுதலாக 6,234 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இன்று (ஏப்ரல் 21) 3,686 பேருந்துகளும், நாளை (ஏப்ரல் 22): 6,132 பேருந்துகளும் (அதிகபட்ச இயக்கம்)தேர்தல் நாளன்று (ஏப்ரல் 23) 1,505 பேருந்துகளும் மொத்தமாக மூன்று நாட்களில் 11,323 பேருந்துகள் பொதுமக்களின் சேவைக்காகக் களமிறக்கப்படுகின்றன.

அரசுப் பேருந்துகள் தவிர, தனியார் ஆம்னி பேருந்துகளும் முழு வீச்சில் இயக்கப்படவுள்ளன. இந்த மூன்று நாட்களிலும் சென்னையில் இருந்து தினசரி 1,260 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ராமதாஸ் படத்தை பயன்படுத்த அன்புமணிக்கு தடை! சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கூட்ட நெரிசலைத் தவிர்க்கச் சென்னையில் வழக்கம் போல 5 முக்கிய இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கிளம்பாக்கம் (KCBT) பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளும், கோயம்பேடு (CMBT) பேருந்து நிலையத்திலிருந்து பெங்களூரு மற்றும் பிற முக்கிய நகரங்களுக்குச் செல்லும் பேருந்துகளும், மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து ஆந்திரா மற்றும் பொன்னேரி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகளும், தாம்பரம் மெப்ஸ் (MEPZ) பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாகச் செல்லும் பேருந்துகளும் கே.கே. நகர் பேருந்து நிலையத்திலிருந்து புதுச்சேரி மற்றும் இசிஆர் (ECR) வழியாகச் செல்லும் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

நீண்ட தூரம் செல்லும் பயணிகள் தங்களது பயணத்தைத் திட்டமிட்டு www.tnstc.in அல்லது மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். பேருந்து இயக்கம் குறித்த புகார்கள் அல்லது தகவல்களுக்கு 94450 14450, 94450 14436 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

இந்தச் சிறப்புப் பேருந்து வசதிகளைப் பயன்படுத்தி அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும் எனப் போக்குவரத்துத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
 

இதையும் படிங்க: பெண்கள் இடஒதுக்கீட்டை திமுக தடுத்து வருகிறது! சாத்தூரில் சந்திரபாபு நாயுடு அனல் பறக்கும் பேச்சு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share