துருக்கியில் விமான விபத்து!! லிபியாவின் ராணுவத் தலைவர் பலி! 7 பேர் மரணம்!
துருக்கியில் நடந்த விமான விபத்தில் லிபியா ராணுவத் தலைவர் முகமது அலி அகமது அல் ஹதாத் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
லிபியாவில் நீண்டகாலமாக உள்நாட்டுப் போர் நிலவி வரும் நிலையில், அந்நாட்டின் மேற்குப் பகுதியை மையமாகக் கொண்டு செயல்படும் ஐ.நா. அங்கீகரித்த அரசின் ராணுவத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் முகமது அலி அகமது அல் ஹதாத், துருக்கியில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் அவருடன் பயணித்த நான்கு உயர் ராணுவ அதிகாரிகளும் மூன்று பணியாளர்களும் உயிரிழந்தனர். மொத்தம் 8 பேர் உயிரிழந்த இந்த சம்பவம் லிபியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் 23-ம் தேதி துருக்கியின் தலைநகர் அங்காராவில் உயர்மட்ட ராணுவப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டார் அல் ஹதாத். துருக்கி பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ராணுவத் தலைவர்களுடன் சந்திப்பு நடத்திய பிறகு, தனியார் பால்கன் 50 ஜெட் விமானத்தில் லிபியாவுக்கு திரும்பினார்.
இதையும் படிங்க: எடப்பாடி இல்லாத அ.தி.மு.க.வில் ஒன்றிணைவோம்!! இபிஎஸ்-க்கு பாடம் புகட்டுவோம்! ஓபிஎஸ் ஆவேசம்
விமானம் அங்காராவின் எசென்போகா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே – சுமார் 40 நிமிடங்களில் – தொடர்பு துண்டிக்கப்பட்டது. மின்சாரக் கோளாறு ஏற்பட்டதாக விமானி அவசரத் தரையிறக்கம் கோரியதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், விமானம் அங்காராவுக்கு தென்மேற்கே சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹய்மானா பகுதியில் விழுந்து நொறுங்கியது.
துருக்கி உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா, விமானத்தின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் கூறினார். அங்கு நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் அனைவரும் உயிரிழந்தது உறுதியானது. லிபிய பிரதமர் அப்துல் ஹமீத் துபைபா, இந்த விபத்தை "பெரும் இழப்பு" என்று கூறி, நாடு முழுவதும் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்தார்.
உயிரிழந்த மற்றவர்கள்: நிலப்படைத் தளபதி ஜெனரல் அல்-பிதூரி கிரைபில், ராணுவ உற்பத்தி ஆணையத்தின் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் மஹ்மூத் அல்-கதாவி, தலைமை ஊழியருக்கான ஆலோசகர் முகமது அல்-அசாவி தியாப் மற்றும் தலைமை ஊழியர் அலுவலக புகைப்படக் கலைஞர் முகமது உமர் அகமது மஹ்ஜூப் ஆகியோர். விமானத்தில் இருந்த மூன்று பணியாளர்களும் உயிரிழந்தனர்.
லிபியாவில் 2011-ல் முஆமர் கதாபி ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு உள்நாட்டுப் போர் தொடங்கியது. தலைநகர் டிரிப்போலியை மையமாகக் கொண்ட அரசு ஐ.நா., அமெரிக்கா, துருக்கி ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கிழக்குப் பகுதியை மையமாகக் கொண்ட போட்டி அரசுக்கு ரஷ்யா, எகிப்து போன்ற நாடுகள் ஆதரவு அளிக்கின்றன. இந்தச் சூழலில் அல் ஹதாத் முக்கியப் பங்காற்றி வந்தார். அவரது இழப்பு லிபியாவின் அரசியல் நிலைமையை மேலும் சிக்கலாக்கும் என்று அஞ்சப்படுகிறது.
விபத்து குறித்து துருக்கியில் விசாரணை நடத்தப்படுகிறது. லிபியாவும் தனது குழுவை அனுப்பி விசாரணையில் பங்கேற்க உள்ளது.
இதையும் படிங்க: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா!! திருச்சிக்கு டிச.30-ல் உள்ளூர் விடுமுறை!