ஈரான் போரை முடிச்சுக்கலாமானு பரிசீலிக்கிறேன்!! ராணுவ நடவடிக்கையும் குறைக்கலாம்! அதிபர் ட்ரம்ப் சூசகம்!
ஈரான் மீதான போரை முடித்துக் கொள்வது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான போர் குறித்து முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்கா தனது முக்கிய ராணுவ இலக்குகளை கிட்டத்தட்ட அடைந்துவிட்ட நிலையில் இருப்பதாகவும், எனவே போரை முடித்துக்கொள்வது குறித்து பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், உடனடி போர் நிறுத்தத்துக்கு (Ceasefire) இப்போதைக்கு வாய்ப்பில்லை என்று டிரம்ப் திட்டவட்டமாகக் கூறினார். “ஈரான் மீதான நடவடிக்கைகளை குறைக்கலாம் என பரிசீலித்து வருகிறோம். ஆனால், நாங்கள் நிர்ணயித்த அனைத்து இலக்குகளும் முழுமையாக நிறைவேறிய பின்னரே ராணுவ நடவடிக்கைகளை முழுவதுமாக நிறுத்துவோம்” என்று அவர் வலியுறுத்தினார்.
கடந்த சில வாரங்களாக அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரானின் அணுசக்தி திட்டங்கள், ஏவுகணை உற்பத்தி நிலையங்கள், ராணுவத் தளங்கள் உள்ளிட்டவற்றை தீவிரமாகத் தாக்கி வருகின்றன. இந்தத் தாக்குதல்களால் ஈரானின் ராணுவ திறன் பெரிதும் பலவீனமடைந்துள்ளதாக அமெரிக்கா கருதுகிறது.
இதையும் படிங்க: ஈரானுக்கு எதிரான போரில் இலக்கை அடைய போறோம்! ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க அதிபர் ட்ரம்ப் அழைப்பு!
இதனிடையே, உலக நாடுகள் எதிர்கொள்ளும் எரிபொருள் நெருக்கடியை ஓரளவு குறைக்கும் நோக்கில், ஈரான் எண்ணெய் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை சற்று தளர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கை சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்தை சீர்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கில் தொடர்ந்து நிலவும் பதற்றம் காரணமாக உலகெங்கும் எரிபொருள் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியா, ஐரோப்பா, ஆசிய நாடுகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றன. டிரம்பின் இந்தப் புதிய அறிவிப்பு, போர் விரைவில் முடிவுக்கு வரும் என நம்பிக்கை அளித்தாலும், முழுமையான அமைதி எப்போது ஏற்படும் என்பது இன்னும் தெளிவாக இல்லை.
ஈரான் தரப்பில் இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை. இருப்பினும், ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால், பதற்றம் முழுமையாகக் குறையவில்லை. அடுத்த சில நாட்களில் டிரம்ப் நிர்வாகம் மேலும் தெளிவான அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக நாடுகள் அனைத்தும் இந்தப் போரின் விரைவான முடிவை ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில், டிரம்பின் அறிவிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: 'பங்கர் பஸ்டர்' குண்டுகள்!! ஈரான் ஏவுகணை தளம் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல்!