ஈரான் - அமெரிக்கா போர்! குட் நியூஸ் சொன்னார் ட்ரம்ப்! இந்த வார இறுதியில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து?!
இந்த வார இறுதியில் ஐரோப்பாவில் அமெரிக்காவும் ஈரானும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவும் ஈரானும் இந்த வார இறுதியில் ஐரோப்பாவில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் நீண்ட நாட்களாக தொடரும் பதற்றத்துக்கு தீர்வு காணும் முயற்சியில் இது முக்கியமான படியாகப் பார்க்கப்படுகிறது.
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நிருபர்களிடம் பேசிய டிரம்ப், “அமெரிக்காவும் ஈரானும் இந்த வார இறுதியில் ஒரு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும். துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்” என்றார்.
ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என ஒப்புக்கொண்டுள்ளதாகவும், ஈரானின் உயர் தலைவர் மொஜ்தபா கமேனி தனிப்பட்ட முறையில் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தார். ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: ஆப்ரஹாம் ஒப்பந்தம் சாத்தியமே இல்லை!! இஸ்ரேலுடன் உறவை புதுப்பிக்க மறுக்கும் பாக்.,! ட்ரம்ப் அப்செட்!
ஈரான் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதால்தான் இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொண்டதாகவும், “ஈரானுடனான போருக்கு சிறந்த தீர்வு கண்டுள்ளோம்” என்றும் டிரம்ப் தெரிவித்தார். இருப்பினும், காலக்கெடு எதுவும் விதிக்க விரும்பவில்லை என அவர் மேலும் சொன்னார்.
ஆனால் ஈரான் தரப்பில் இந்த அறிவிப்புக்கு உடனடி மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. “அமெரிக்காவும் ஈரானும் அமைதி ஒப்பந்தம் குறித்து இறுதி உடன்பாடு எட்டவில்லை. பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடர்கின்றன” என்று ஈரான் அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். டிரம்ப் வெளியிடும் செய்திகளை முழுமையாக நம்ப முடியாது என்றும், இறுதி ஒப்பந்தம் எட்டப்படும் வரை இது வெறும் அறிவிப்பாகவே பார்க்கப்பட வேண்டும் என்றும் ஈரான் தரப்பு வலியுறுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் சமீபகாலமாக அதிகரித்து வந்த பதற்றம் மற்றும் தாக்குதல்களுக்கு மத்தியில், அமைதி ஒப்பந்தம் குறித்த எதிர்பார்ப்பு உலக அரங்கில் அதிகரித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு உலக பொருளாதாரத்துக்கு முக்கியமானது என்பதால், இந்த ஒப்பந்தம் வெற்றி பெற்றால் உலக நாடுகள் பெரும் நிம்மதி அடையும்.
இரு தரப்பு பேச்சுவார்த்தைகளும் தொடரும் நிலையில், இந்த வார இறுதியில் உண்மையில் ஒப்பந்தம் கையெழுத்தாகுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். உலக அரசியல் வல்லுநர்கள் இந்த வளர்ச்சிகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஹார்முஸ் நீரிணை திறப்பது கட்டாயம்! இல்லையென்றால் இன்னொரு வழியில் திறக்கப்படும்! மார்கோ வார்னிங்!