×
 

ஈரான் போர் சின்ன விஷயம்! 37.5 பில்லியன் டாலர் செலவான மோதல் குறித்து அதிபர் டிரம்ப் பதில்!

அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பதிலடியாக வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்காவின் கூட்டாளியான குவைத் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா–ஈரான் இடையே பல மாதங்களாக நீடித்து வரும் மோதல் குறித்து அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்த கருத்து சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த மோதலை ‘போர்’ என்று அழைக்க மறுத்த துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த டிரம்ப், ஈரான் தொடர்பான ராணுவ நடவடிக்கை பெரிய விஷயம் அல்ல என்றும், தங்களுக்கு அது ஒரு சிறிய ராணுவ மோதல் போன்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது டிரம்பிடம் ஈரான் மோதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, வான்ஸ் கூறிய கருத்தை தாம் புரிந்துகொள்வதாக தெரிவித்த டிரம்ப், தற்போதைய நிலையில் ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் அவ்வப்போது மட்டுமே நடைபெறுவதாக குறிப்பிட்டார்.

இந்த மோதல் அமெரிக்க வரி செலுத்துவோருக்கு 37.5 பில்லியன் டாலருக்கும் அதிகமான செலவை ஏற்படுத்தியுள்ளதாகவும், 18 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படும் நிலையில், டிரம்ப் அதனை ‘சின்ன விஷயம்’ என வர்ணித்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மறைமுகமாக தாக்குவதை நிறுத்துங்கள்! எங்களை பலவீனமாக நினைக்காதீர்கள் டிரம்புக்கு கனடா பிரதமர் பதிலடி!

முன்னதாக வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில் பேசிய துணை அதிபர் வான்ஸ், ஈரானுடனான தற்போதைய சூழ்நிலையை ‘போர்’ என்று அழைக்கப் போவதில்லை என்று தெரிவித்திருந்தார். தீவிரமான துப்பாக்கிச் சண்டை தற்போது நடைபெறவில்லை என்பதே அதற்கான காரணம் என்றும் அவர் கூறியிருந்தார்.

மேலும், நவம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தலுக்கு முன்பாக இந்த மோதல் முடிவுக்கு வருமா என்ற கேள்விக்கும் வான்ஸ் உறுதியான பதில் அளிக்கவில்லை. அமெரிக்க நாடாளுமன்றத்தில் குடியரசுக் கட்சி தனது குறுகிய பெரும்பான்மையை தக்கவைத்துக்கொள்ள தேர்தலில் போட்டியிடும் நிலையில், ஈரான் விவகாரம் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதற்கிடையே, அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பதிலடியாக வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்காவின் கூட்டாளியான குவைத் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் தொடர்ந்து நீடிக்கிறது.

ஒருபுறம் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான விவாதம் அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் நெருங்குவதால் ஈரான் விவகாரம் அமெரிக்க உள்நாட்டு அரசியலிலும் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தி முழுவதும் அமெரிக்கா கட்டுப்பாட்டில் உள்ளது! டிரம்பின் அதிரடி அறிவிப்பால் ஈரானுக்கு புதிய நெருக்கடி?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share