அமெரிக்கப் பொருட்களுக்கு 100% வரிவிலக்கு அளிக்க இந்தியா விருப்பம்..! கிளப்பிவிடும் அதிபர் ட்ரம்ப்..!
அமெரிக்கப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு அளிக்க இந்தியா விருப்பமாக இருக்கிறது என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்கப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு அளிக்க இந்தியா விருப்பமாக இருக்கிறது என்றும், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழலை குறைக்க நான்தான் முயன்றேன் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறியுள்ளார். ஆனால், இந்தியா தரப்பில் இதுவரை 100 சதவீதம் வரிவிலக்கு அளிப்பது குறித்தோ, அமெரிக்க அதிகாரிகளிடம் வர்த்தகம் குறித்து ஆலோசித்தது குறித்தோ எந்தவிதமான தகவலையும் உறுதி செய்யவில்லை.
ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று நேர்காணல் அளித்தார். அப்போது அவரிடம் இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அதிபர் ட்ரம்ப் கூறுகையில் “இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் இருந்தது, இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம், ஏற்றுமதி, இறக்குமதி விவகாரத்தைக் கொண்டு வந்து பதற்றத்தைக் குறைத்தது நான்தான். இரு நாடுகளுக்கிடையே வெறுப்பு அதிகமாக இருந்தது. நாம் வர்த்தகம் பற்றிப் பேசப் போகிறோம். நாம் வரும் காலத்தில் அதிகமாக வர்த்தகம் செய்யப் போகிறோம் என நான் தெரிவித்து பதற்றத்தைக் குறைத்தேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வட்டியைக் குறைங்க..! அமெரிக்க பெடரல் வங்கியுடன் மோதலுக்கு தயாராகும் அதிபர் ட்ரம்ப்..!
இந்தியாவுடன் வர்த்தகம் குறித்து கேள்வி எழுப்பியபோது அதற்கு அதிபர் ட்ரம்ப் கூறுகையில் “உலகிலேயே அதிகமாக வரிவிதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றத்தைக் குறைத்து, அமைதியைக் கொண்டுவர வர்த்தகம்தான் பயன்பட்டது. உங்களுக்குத் தெரியுமா, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களுக்கும் 100 % வரிவிலக்கு அளிக்க இந்தியா விருப்பமாக இருக்கிறது.
இரு நாடுகளுக்கு இடையிலான இந்த ஒப்பந்தம் விரைவில் நடைமுறைக்கு வரும். நான் இதில் அவசரப்படவில்லை. எங்களுடன் வர்த்தக உறவு வைத்துக்கொள்ள ஒவ்வொரு நாடும் ஆவலுடன் இருக்கிறார்கள்.தென் கொரியா எங்களுடன் ஒப்பந்தம் செய்து வர்த்தகம் செய்ய ஆர்வமாக இருக்கிறது, ஆனால், நான் ஒவ்வொருவரிடமும் ஒப்பந்தம் செய்துகொள்ளத் தயாராக இல்லை. ஒரு எல்லையை வரையரை செய்ய விரும்புகிறேன். நான் இன்னும் சில ஒப்பந்தங்களைச் மட்டுமே செய்ய இருக்கிறேன். 150 நாடுகள் எங்களுடன் ஒப்பந்தங்களைச் செய்ய விரும்புகின்றன, என்னால் அவ்வளவு செய்ய முடியாது” எனத் தெரிவித்தார்.
ஆனால், வர்த்தக உடன்பாடு குறித்து இதுவரை இந்தியா, அமெரிக்கா அதிகாரிகள் பேசவேயில்லை, எந்த அறிவிப்பும் அதிகாரபூர்வமாக இந்தியா தரப்பில் அறிவிக்கவில்லை. இந்த வாரத்தின் தொடக்கத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரன்திர் ஜெய்ஸ்வால் கூறுகையில் “ இந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தகம் குறித்த பேச்சு இரு தலைவர்களுடனான தொலைப்பேசி உரையாடலில் பேசப்படவில்லை.” எனத் தெரிவித்தார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றத்தைத் தணிக்க நான் கடுமையாக உழைத்தேன் என்று இந்த வாரத்தில் மட்டும் 7-வது முறையாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 48 மணி நேரத்தில் 2 ஆபரேஷன்.. முக்கிய பயங்கரவாதி கதை முடிப்பு.. ருத்ர தாண்டவம் ஆடும் இந்திய ராணுவம்..!