ரஷ்யா, சீனாவுக்கு ‘செக்’! கிரீன்லாந்தை கைப்பற்றும் திட்டம்? டென்மார்க்குடன் டிரம்ப் போட்ட முக்கிய ஒப்பந்தம்!
இந்த புதிய உடன்பாட்டின் மூலம் கிரீன்லாந்தில் அமெரிக்காவின் ராணுவ இருப்பை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கைகள் தொடங்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்: கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் டென்மார்க் இடையே புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கிரீன்லாந்தின் பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்காவுக்கு நிரந்தர கட்டுப்பாடு கிடைக்கும் வகையில் டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துடன் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். எனினும், கிரீன்லாந்து டென்மார்க்கிடம் இருந்து அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவதாக இதன் பொருள் இல்லை. கிரீன்லாந்து தொடர்ந்து டென்மார்க் இராச்சியத்தின் தன்னாட்சிப் பகுதியாகவே இருக்கும் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று டிரம்ப் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தார். இதற்கு டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து தரப்பில் கடும் எதிர்ப்பு நிலவியது. இந்த நிலையில், இரு தரப்புக்கும் இடையே பல மாதங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு பாதுகாப்பு தொடர்பான புதிய உடன்பாடு உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், கிரீன்லாந்தின் பாதுகாப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய தேவைகளில் அமெரிக்காவுக்கு நிரந்தரமாக செயல்படும் உரிமையை உறுதி செய்யும் வகையில் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், அமெரிக்காவின் எதிரி நாடுகள் கிரீன்லாந்தில் ராணுவ தளம் அமைப்பதையோ, ராணுவ இருப்பை ஏற்படுத்துவதையோ அல்லது முக்கியமான முதலீடுகளை மேற்கொள்வதையோ தடுக்க இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் டீசல் விலை கிடுகிடு உயர்வு! ஜெலன்ஸ்கிக்கு டிரம்ப் போட்ட அதிரடி கண்டிஷன்!
குறிப்பாக ஆர்டிக் பகுதியில் ரஷ்யா மற்றும் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதை தடுப்பது அமெரிக்காவின் முக்கிய பாதுகாப்பு கவலைகளில் ஒன்றாக உள்ளது. கிரீன்லாந்தின் புவியியல் அமைவிடம் வட அமெரிக்காவின் பாதுகாப்புக்கும், ஆர்டிக் மற்றும் வட அட்லாண்டிக் பகுதிகளின் கண்காணிப்புக்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அமெரிக்காவுக்கு ஏற்கனவே கிரீன்லாந்தில் பிடுஃபிக் விண்வெளித் தளம் உள்ளது.
இந்த புதிய உடன்பாட்டின் மூலம் கிரீன்லாந்தில் அமெரிக்காவின் ராணுவ இருப்பை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கைகள் தொடங்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். புதிய ராணுவ கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, ஒப்பந்தத்தின் முழுமையான விதிமுறைகள் இன்னும் பொதுவெளியில் வெளியாகவில்லை. அடுத்த வாரம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தின்போது இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளதாக டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து தரப்புகள் தெரிவித்துள்ளன. ஆனால், டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து நாடாளுமன்றங்களின் ஒப்புதலும் தேவைப்படுகிறது.
இதனால், கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றும் விவகாரத்தில் புதிய ராணுவ-பாதுகாப்பு ஏற்பாடு உருவாகியுள்ளதே தவிர, தீவு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படவில்லை என்பது தற்போதைய தகவல்களின் முக்கிய அம்சமாக உள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் மத்திய கிழக்கைச் சூழ்ந்த போர் மேகம்... வானிலிருந்து பொழியும் குண்டு மழை... அமெரிக்கா - ஈரான் இடையே சரமாரி தாக்குதல்...!!