இது புயலுக்கு முன் இருக்கும் அமைதி!! ஈரான் மீது புதிய தாக்குதல் நடத்த திட்டம்! ட்ரம்ப் சூசகம்!
ஈரான் மீது புதிய தாக்குதல்களைத் தொடுப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக வரும் செய்திகளுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார்.
வாஷிங்டன்: ஈரான் மீது புதிய தாக்குதல் நடத்துவது குறித்து அமெரிக்கா பரிசீலனை செய்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட அந்தப் படத்தில், கொந்தளிப்பான கடலில் பல போர்க் கப்பல்கள் சென்று கொண்டிருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. அந்தக் கப்பல்களில் ஈரானியக் கொடிகள் பறக்கின்றன. அவற்றுக்கு முன்னால் நின்றபடி டிரம்ப் கேமராவை நோக்கி சுட்டிக்காட்டும் விதத்தில் படம் அமைக்கப்பட்டுள்ளது. படத்துடன் “புயலுக்கு முந்தைய அமைதி” (Calm before the Storm) என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. டிரம்புக்கு அருகில் அமெரிக்கக் கடற்படை அதிகாரி ஒருவர் நிற்பது போன்ற காட்சியும் உள்ளது.
தற்போது ஈரான் அணுசக்தித் திட்டம் தொடர்பாக அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து நடத்தும் நடவடிக்கைகளுக்கு இடையில் தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது. அமைதிப் பேச்சு நடைபெற்று வரும் நிலையில், இரு தரப்பும் நிபந்தனைகளை விதித்து வருகின்றன. இந்தப் பேச்சுகள் தோல்வியில் முடிந்தால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் தொடுக்க அமெரிக்கா தயாரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: மேற்காசிய போரை நிறுத்த 14 அம்ச ஒப்பந்தம்!! அமெரிக்கா - ஈரான் விரைவில் கையெழுத்திட வாய்ப்பு!
டிரம்பின் இந்தப் பதிவு சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சிலர் இதை ஈரானுக்கு எதிரான எச்சரிக்கையாகப் பார்க்க, மற்றவர்கள் இது வெறும் உளவியல் போர் என்று கருதுகின்றனர்.
இதனிடையே, ஈரான் பார்லிமென்ட் சபாநாயகர் முகமது பாகர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். “எந்தவித ஆக்கிரமிப்புக்கும் தகுந்த பதிலடி கொடுக்க ஈரானின் ராணுவம் முழுமையாக தயாராக உள்ளது. அவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு பதிலடி கிடைக்கும். தவறான முடிவுகள் எப்போதும் தவறான விளைவுகளையே ஏற்படுத்தும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் அழுத்தம் தொடரும் நிலையில், டிரம்பின் இந்தப் பதிவு மேற்காசியப் பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. அமைதிப் பேச்சு வெற்றி பெறுமா அல்லது மீண்டும் போர் மூளுமா என உலகம் உற்று நோக்கி வருகிறது.
இதையும் படிங்க: ஆக்ரோஷமாக தாக்குதலை நடத்துவோம்! எதிர்காலம் கடினமாகும்! ஈரானுக்கு ட்ரம்ப் மீண்டும் வார்னிங்!