நான் போற்றும் உலகத்தலைவர்! பிரதமர் மோடிக்கு ஐஸ் வைக்கும் அதிபர் ட்ரம்ப்! சீனாவுடனும் நெருக்கம்!
''பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் நான் போற்றும் உலகத் தலைவர்கள்,'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரை தான் மிகவும் போற்றும் உலகத் தலைவர்கள் எனப் பாராட்டியுள்ளார். பிரான்சில் நடைபெற்ற ஜி7 மாநாட்டை முடித்துக் கொண்டு அமெரிக்கா திரும்பிய அவர், அங்கு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் இந்த முக்கிய கருத்தை வெளிப்படுத்தினார்.
டிரம்ப் தனது பேட்டியில், “பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் நான் மிகவும் போற்றும் உலகத் தலைவர்கள்” எனக் கூறினார். ஷி ஜின்பிங்கை “தொழில்முறை மிக்கவர்” (Highly Professional) என்றும், பிரதமர் மோடியை “உறுதியான தலைவர்” (Very Strong Leader) என்றும் அவர் சிறப்பித்தார்.
ஜி7 மாநாட்டுக்குப் பிறகு அளித்த இந்த பேட்டி உலக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. டிரம்ப், பலவீனமான தலைவர் யார் என்பதை கேட்டபோது அதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். மாறாக, தான் மதிக்கும் இரு தலைவர்களின் பலத்தை மட்டும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: சாமானிய மக்களின் முன்னேற்றமே ஏ.ஐ.,யின் வெற்றி! ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் டிரம்ப் நீண்ட காலமாக நல்ல உறவைப் பேணி வருகிறார். இரு தலைவர்களும் பல முக்கிய சர்வதேச விவகாரங்களில் ஒருவருக்கொருவர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை டிரம்ப் பல சந்தர்ப்பங்களில் விமர்சித்திருந்தாலும், தற்போது அவரது தலைமைத்துவத்தை பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பேட்டி சர்வதேச அரசியல் அரங்கில் புதிய விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது. அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவுகள் எப்படி மாறும் என்பதை நோக்கி உலக நாடுகள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் இந்த மூன்று நாடுகளின் எதிர்கால ஒத்துழைப்பு எப்படி இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டிரம்ப்பின் இந்தப் பாராட்டு இந்தியாவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. பிரதமர் மோடியின் உறுதியான தலைமைத்துவத்தை அமெரிக்க அதிபர் அங்கீகரித்திருப்பது இந்தியாவின் சர்வதேச நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: போர்களால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு யார் உதவுவது?! ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி கேள்வி!