டிரம்பின் அதிரடி வரி அச்சுறுத்தல்: கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளுடன் மோதல்..!!
கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு வரி விதிப்பதில் 100 சதவீதம் உறுதியாக இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், உலக அரங்கில் தொடர்ந்து கடுமையான கொள்கைகளை அமல்படுத்தி வருகிறார். சமீப காலங்களில் பல்வேறு நாடுகளுக்கு வரி விதிப்புகளை அறிவித்து வரும் அவர், எண்ணெய் வளம் நிறைந்த வெனிசுலாவை குறிவைத்து நடவடிக்கை எடுத்தார். இதன் விளைவாக, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு, அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, வெனிசுலாவின் பல கோடி மதிப்பிலான எண்ணெய் பீப்பாய்களை அமெரிக்கா கொள்முதல் செய்துள்ளது.
இதன்பின், ஈரானுடன் வர்த்தக உறவுகளை பராமரிக்கும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிப்புகளை டிரம்ப் அறிவித்தார். இந்நிலையில், ஆர்க்டிக் பகுதியில் உள்ள கிரீன்லாந்து தீவை தனது அடுத்த இலக்காக டிரம்ப் தேர்வு செய்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "ஆர்க்டிக் பெருங்கடலில் ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதிக்கத்திலிருந்து அமெரிக்காவை பாதுகாக்க கிரீன்லாந்து அவசியமானது" என்று கூறினார். இதனால், டென்மார்க்கின் சுயாட்சி பிராந்தியமான கிரீன்லாந்தை விற்குமாறு அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: டிரம்ப்பின் கிரீன்லாந்து கனவு..!! NORAD விமானங்களின் பயணம் பதற்றத்தை அதிகரிக்கிறதா..??
இருப்பினும், டென்மார்க் அரசு இதற்கு உடன்படவில்லை. நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகளும் இந்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இதற்கு பதிலடியாக, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கிரீன்லாந்தின் பாதுகாப்பை வலுப்படுத்த தங்கள் இராணுவப் படைகளை அனுப்பி வருகின்றன. இதனால், அமெரிக்கா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான வர்த்தக உறவுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்புக்குமான வர்த்தக ஒப்பந்தங்களை இறுதி செய்யும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், டிரம்ப் மீண்டும் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பிப்ரவரி 1 முதல் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்களுக்கும் 10 சதவீத வரி விதிக்கப்படும்" என்றார். இந்த வரி விதிப்பு டென்மார்க், நார்வே, சுவீடன், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுக்கும் பொருந்தும் என அவர் தெளிவுபடுத்தினார். கிரீன்லாந்தை வாங்குவதற்கான ஒப்பந்தம் ஏற்படும் வரை இந்த வரிகள் தொடரும் என்று அவர் உறுதியளித்தார்.
வரி விதிப்பு அச்சுறுத்தல்களை தொடர்வீர்களா என கேட்டபோது, "100 சதவீதம் உறுதியாக இருக்கிறேன்" என்று டிரம்ப் பதிலளித்தார். அதேசமயம், கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்க இராணுவத்தை அனுப்புவீர்களா என கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்தார். இதனால், இராணுவ தாக்குதல் திட்டம் இல்லை என தெரிகிறது. இருப்பினும், இங்கிலாந்து உள்ளிட்ட நேட்டோவின் ஏழு உறுப்பு நாடுகளின் பொருட்களுக்கு வரி விதிப்பது உறுதி என அவர் வலியுறுத்தினார்.
இந்த நடவடிக்கைகள் உலக வர்த்தகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. ஐரோப்பிய நாடுகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அமெரிக்காவின் இந்த கொள்கைகள், உலக அமைதி மற்றும் வர்த்தக உறவுகளை பாதிக்கும் என சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கிரீன்லாந்து டென்மார்க்கிற்கே சொந்தம்! அமெரிக்காவின் ஆதிக்க முயற்சிக்கு ரஷ்யா முட்டுக்கட்டை!