×
 
☰

அமெரிக்க தேர்தலுக்கு பின் மீண்டும் குண்டு வீச திட்டம்?! ஈரான் விவகாரத்தில் டிரம்பின் அடுத்த திட்டம்!

அமெரிக்காவுடன் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் 7 நாட்களுக்குள் செயல்படுத்தக்கூடிய திட்டத்தை முன்வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான்–அமெரிக்கா இடையேயான போர் நீடித்து வரும் நிலையில், போர் நிறுத்தத்துக்காக ஈரான் முன்வைத்த 7 நாள் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க இடைத்தேர்தலுக்குப் பிறகு ஈரான் மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்கள் நடத்துவது குறித்து டிரம்ப் தனது உதவியாளர்களிடம் பேசியதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, நியூயார்க்கில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தையொட்டி நடைபெற்ற சந்திப்பில், அமெரிக்காவுடன் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் 7 நாட்களுக்குள் செயல்படுத்தக்கூடிய திட்டத்தை முன்வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திட்டத்தின்படி, அமெரிக்கா ஈரான் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை தளர்த்த வேண்டும், ஈரானிய எண்ணெய் ஏற்றுமதி மீதான தடைகளை தளர்த்த வேண்டும் மற்றும் லெபனானில் போர் நிறுத்தத்தை கடைப்பிடிக்க வேண்டும் என ஈரான் நிபந்தனை விதித்துள்ளது. அதற்கு பதிலாக, ஹார்முஸ் ஜலசந்தியை 7 நாட்களுக்குள் மீண்டும் திறப்பதுடன், அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகளையும் தொடங்கத் தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: நியூயார்க்கில் டிரம்ப்பை சந்திக்கும் ஜெலென்ஸ்கி! உக்ரைன் போரில் அடுத்த திருப்பம்? பரபரப்பான அறிவிப்பு!

உலகின் முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சர்வதேச வர்த்தகம் நடைபெற்று வருகிறது. தற்போதைய போரால் இந்தப் பகுதியில் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், உலக எரிபொருள் சந்தையிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, டிரம்ப் இந்த 7 நாள் திட்டத்தை ஏற்கவில்லை என்றும், நவம்பர் இடைத்தேர்தலுக்குப் பிறகு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து அவர் எதிர்பார்ப்பு தெரிவித்ததாகவும் அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், தாக்குதல் நடைபெற்றே தீரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதாக தகவல் இல்லை. தாக்குதலின் அளவு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை மாறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம், ஈரான் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறி வருகிறது. அமெரிக்காவுடன் மீண்டும் அணுசக்தி பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கான வாய்ப்பையும் ஈரான் முன்வைத்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும் சில சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில், ஹார்முஸ் ஜலசந்தியின் எதிர்கால கட்டுப்பாடு, எண்ணெய் போக்குவரத்து மற்றும் ஈரான்–அமெரிக்கா அணுசக்தி பேச்சுவார்த்தை ஆகியவை சர்வதேச அளவில் முக்கிய கவனம் பெற்றுள்ளன. போர் மீண்டும் தீவிரமடையுமா அல்லது பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏற்படுமா என்பது அடுத்தகட்ட நகர்வுகளை பொறுத்தே அமையும்.

இதையும் படிங்க: ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள்!! முழு நாட்டையும் தகர்ப்பேன்! ஈரானுக்கு டிரம்ப் விடுத்த எச்சரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share