உலக நலனுக்காக.. ஈரான் மீது திட்டமிட்ட ராணுவத் தாக்குதல் நிறுத்தம்..!! டிரம்ப் அதிரடி அறிவிப்பு..!!
உலகின் நன்மைக்காகவும், ஈரானின் எதிர்கால வாழ்விற்காகவும் இந்த தாக்குதலை நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டுள்ளேன்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது திட்டமிடப்பட்டிருந்த பெரும் இராணுவத் தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளார். இது ஈரான் மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க எடுக்கப்பட்ட முடிவு என அவர் தனது ட்ரூத் சோசியல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
உலக நலனுக்காகவும், ஈரானின் எதிர்கால வளர்ச்சிக்காகவும் இந்தத் தாக்குதலை ரத்து செய்ததாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இது ஒரு விரைவான அமைதி ஒப்பந்தத்திற்கு உட்பட்டது என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். ஒப்பந்தத்தின் அடிப்படை வரைமுறைகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன என்றும், அதில் ஹார்முஸ் நீரிணையை உடனடியாகவும் முழுமையாகவும் திறப்பது, ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலை முற்றிலும் ஒழிப்பது ஆகியவை அடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலும் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கப் படைகள் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இல்லாத அளவுக்குத் தயாராக இருப்பதாக எச்சரித்த டிரம்ப், ஒப்பந்தம் விரைவில் முடிவுக்கு வராவிட்டால் மீண்டும் தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் என எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: மத்திய கிழக்கில் பதற்றம்! ஈரான் புஷஹர் அணுமின் நிலையம் மீது அமெரிக்க ஏவுகணை தாக்குதல்!
“அமெரிக்கா லாக் அண்ட் லோடட் நிலையில் உள்ளது” என அவர் வலியுறுத்தியுள்ளார்.இந்த முடிவுக்கு முன்னர் சவுதி அரேபியாவின் இளவரசர் முஹம்மது பின் சல்மான் டிரம்புடன் தொலைபேசியில் பேசி, பதற்றத்தைத் தணிக்குமாறு கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி, பாகிஸ்தான் உள்ளிட்ட பிராந்திய நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழுத்தம் கொடுத்துள்ளன.
சமீப காலமாக அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் உச்சத்தை எட்டியிருந்தது. பிப்ரவரி இறுதியில் தொடங்கிய மோதலில் ஹார்முஸ் நீரிணை மீண்டும் மீண்டும் பாதிக்கப்பட்டு, உலக எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு வருகிறது. ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, புதிய தாக்குதல்கள் நடந்தால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்திருந்தார்.
இப்போது பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு உருவாகியுள்ள நிலையில், ஒப்பந்தம் விரைவில் முடிவடையாவிட்டால் நிலைமை மீண்டும் மோசமடையும் என்பது தெளிவாகத் தெரிகிறது. உலக நாடுகள் இந்த முயற்சி வெற்றி பெறும் என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.
இதையும் படிங்க: இந்திய மாணவர்களுக்கு இடியாய் இறங்கிய செய்தி... அமெரிக்க கனவில் மண்ணைப் போட்ட டிரம்ப்...!