×
 

ஈரான் என ஒருநாடு இருந்த அடையாளமே இருக்காது! வரைபடத்தில் குறிவைத்து வார்னிங் கொடுத்த ட்ரம்ப்!

போர் நிறுத்தம் தொடர்பான விவகாரத்தில் காலம் தாழ்த்திக் கொண்டே சென்றால், ஈரான் இருந்த அடையாளமே இல்லாமல் செய்து விடுவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வாஷிங்டன்: ஈரான் உடனான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் காலம் தாழ்த்தினால், ஈரான் என்ற அடையாளமே இல்லாமல் செய்துவிடுவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எச்சரிக்கை சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய ஈரான் - அமெரிக்கா (மற்றும் இஸ்ரேல்) இடையிலான போர் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகளையும், ஈரானின் உள்கட்டமைப்புகளுக்கு பெரும் சேதத்தையும் ஏற்படுத்தியது. போரின் விளைவாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், போர் நிறுத்தத்திற்கு உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், ஈரான் தன்னிடம் உள்ள 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும், போர் இழப்பீடு கோரிக்கையை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட அமெரிக்காவின் கடுமையான நிபந்தனைகளால் பேச்சுவார்த்தை முடங்கியுள்ளது. இந்தச் சூழலில் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இந்தியாவில் முழுவேகத்தில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை! பிரதமர் மோடி நம்பிக்கை!

“ஈரானுக்கு நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது. அவர்கள் விரைவாகச் செயல்படுவது மிகவும் நல்லது. இல்லையெனில், அவர்களைப் பற்றிய அடையாளமே மிஞ்சாது. நேரம் மிக முக்கியமானது” என டிரம்ப் எழுதினார். மேலும், ஈரானை சுற்றி வளைத்தது போன்ற உலக வரைபடப் படத்தை அம்புக்குறியிட்டு, அமெரிக்கக் கொடி நிறத்தில் வெளியிட்டு வலியுறுத்தினார்.

இந்தப் போர் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள், எண்ணெய் சந்தை நிலவரம் மற்றும் பிராந்திய பதற்றம் ஆகியவை உலக நாடுகளை கவலைக்குள்ளாக்கியுள்ளன. டிரம்ப்பின் இந்த எச்சரிக்கைக்குப் பிறகு, ஈரான் - அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், டிரம்ப்பின் இந்தக் கடுமையான நிலைப்பாடு சர்வதேச அமைதிக்கு சவாலாக அமையும் என சில விமர்சகர்கள் அஞ்சுகின்றனர். ஈரான் தரப்பிலும் இந்த எச்சரிக்கைக்கு உரிய பதிலடி கொடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

போர் நிறுத்தம் விரைவில் நடைமுறைக்கு வராவிட்டால், மத்திய கிழக்கு பிராந்தியம் மேலும் சிக்கலான நிலைக்கு செல்லும் அபாயம் உள்ளது. உலக நாடுகள் இப்போது டிரம்ப் - ஈரான் இடையேயான பேச்சுவார்த்தையின் மீது தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

இதையும் படிங்க: நெதர்லாந்து! ஸ்வீடனை தொடர்ந்து மோடி நார்வே பயணம்! 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமரின் முதல் பயணம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share