ட்ரம்ப் - ஜி ஜிங்பின் சந்திப்பு!! 6 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் சம்பவம்!! முடிவுக்கு வருகிறதா வர்த்தகப்போர்?!
தென் கொரியா உச்சிமாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் இன்று சந்தித்து பேசினார்.
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டுக்கு முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை தென் கொரியாவின் பூசான் நகரில் இன்று (அக்டோபர் 30) சந்தித்துப் பேசினார். கடந்த 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக நேரில் நடைபெறும் இந்தச் சந்திப்பு, உலக அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவும் சீனாவும் கடந்த சில ஆண்டுகளாக வர்த்தகப் போரில் ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்கா சீனப் பொருட்களுக்கு அதிக வரி விதித்தது, சீனா பதிலடி கொடுத்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டது. இந்நிலையில், இன்றைய சந்திப்பு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
டிரம்ப் என்ன சொன்னார்?
சந்திப்புக்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய டிரம்ப், “ஜி ஜின்பிங்குடனான சந்திப்பு மிகவும் வெற்றிகரமாக இருக்கும். நாங்கள் ஒருவரையொருவர் நன்றாக அறிவோம். எப்போதும் சிறந்த உறவு கொண்டுள்ளோம். ஜி ஜின்பிங் ஒரு மரியாதைக்குரிய தலைவர். சீனா ஒரு சிறந்த நாடு. எதிர்காலத்தில் நாங்கள் அற்புதமான உறவைப் பேணுவோம் என்று நம்புகிறேன்” என்றார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி அழகானவர், சாதனையாளர்!! சீக்கிரமே ஒப்பந்தம் கையெழுத்தாகும்!! ஐஸ் வைக்கும் ட்ரம்ப்!
ஜி ஜின்பிங் என்ன சொன்னார்?
சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசுகையில், “வலுவான சீனா-அமெரிக்க உறவு உலகுக்கு முக்கியம். பல ஆண்டுகளாக நாங்கள் நண்பர்களாகவும் கூட்டாளிகளாகவும் இருக்க வேண்டும் என்று கூறி வருகிறேன். டிரம்பை மீண்டும் பார்ப்பது மகிழ்ச்சி. தேர்தல் பிறகு மூன்று முறை தொலைபேசியில் பேசினோம், பல கடிதங்கள் பரிமாறினோம். உறவு ஒட்டுமொத்தமாக நிலையானது. சிறு மோதல்கள் இயல்பானவை தான்.
உலக அமைதிக்காக ஒன்றிணைந்து செயல்படுவோம். காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தில் டிரம்ப் ஆற்றிய பங்கைப் பாராட்டுகிறேன். மலேசியாவில் இருந்தபோது, கம்போடியா-தாய்லாந்து எல்லைப் பிரச்னையைத் தீர்க்க உதவினார். அமைதிப் பேச்சுவார்த்தைகளை நாங்கள் ஆதரிக்கிறோம்” என்றார்.
வர்த்தக ஒப்பந்தம் வருமா?
பூசானில் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர்களா? என நிருபர்கள் கேட்டதற்கு, “இருக்கலாம்” என்று டிரம்ப் சிரித்தபடி சூசகமாக பதிலளித்தார். இது உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.APEC உச்சிமாநாடு அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் பூசானில் நடைபெறவுள்ளது.
இதில் 21 ஆசிய-பசிபிக் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.இரு தலைவர்களின் இன்றைய சந்திப்பு, வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், உலகப் பொருளாதாரத்தை நிலைப்படுத்தவும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 3வது முறையாக அமெரிக்க அதிபர்!! ட்விஸ்ட் வைக்கும் ட்ரம்ப்! ஆடிப்போன அமெரிக்கா!