ரஷ்யா- உக்ரைன் அமைதி ஒப்பந்தம்!! ஜெலன்ஸ்கியை சந்தித்த பின் ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய தகவல்!
ரஷ்யா- உக்ரைன் அமைதி ஒப்பந்தத்திற்கு எப்போது இல்லாத அளவுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. 20 அம்ச அமைதி திட்டத்தில் 90 சதவீதம் ஜெலன்ஸ்கி சம்மதித்துள்ளார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
பாம் பீச் (புளோரிடா): ரஷ்யா-உக்ரைன் இடையிலான நான்கு ஆண்டுகால போரை முடிவுக்கு கொண்டுவரும் அமைதி ஒப்பந்தம் எப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கமாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை புளோரிடாவில் உள்ள மார்-அ-லாகோ வீட்டில் சந்தித்த பிறகு இரு தலைவர்களும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
டிரம்ப் பேசுகையில், “ஜெலென்ஸ்கியுடனான சந்திப்பு அற்புதமாக இருந்தது. நாங்கள் நிறைய விவாதித்தோம். அமைதி ஒப்பந்தத்துக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. 20 அம்ச அமைதித் திட்டத்தில் 90 சதவீதத்துக்கு மேல் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஏற்பட்ட மிகக் கொடிய போரை முடிவுக்கு கொண்டுவர அவர்கள் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஏராளமான உயிர்கள் பலியாகிவிட்டன. இப்போது இரு தலைவர்களும் ஒப்பந்தம் செய்ய விரும்புகின்றனர். நான் புடினுடன் மீண்டும் பேச உள்ளேன். பேச்சுவார்த்தைகளைத் தொடர்வோம்” என்றார்.
இதையும் படிங்க: உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தம்?! ட்ரம்பின் 20 அம்ச திட்டத்துக்கு ஜெலன்ஸ்கி ஒப்புதல்! புதின் முடிவு?
ஜெலென்ஸ்கி பேசுகையில், “நாங்கள் சிறந்த கலந்துரையாடலை நடத்தினோம். சமீப வாரங்களில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் குழுக்கள் அடைந்த முன்னேற்றத்தைப் பாராட்டுகிறோம். அமெரிக்கா-உக்ரைன் பாதுகாப்பு உத்தரவாதங்களில் 100 சதவீத உடன்பாடு ஏற்பட்டுள்ளது. நிலையான அமைதியை அடைவதில் பாதுகாப்பு உத்தரவாதங்கள் முக்கிய மைல்கல். உக்ரைன் அமைதிக்குத் தயாராக உள்ளது” என்றார்.
இரு தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்தாலும், கிழக்கு டான்பாஸ் பகுதியின் எதிர்காலம் போன்ற சில கடினமான பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்று டிரம்ப் ஒப்புக்கொண்டார். சந்திப்புக்கு முன்பு டிரம்ப் ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசியில் பேசியது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா தரப்பில் இருந்து இந்தத் திட்டம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ கருத்து வெளியாகவில்லை.
நான்கு ஆண்டுகளாகத் தொடரும் இப்போர் ஏராளமான உயிரிழப்புகளையும் பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்திப்பு போரை முடிவுக்கு கொண்டுவரும் முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. உலக நாடுகள் அமைதிக்கான இந்த முயற்சிகளை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
இதையும் படிங்க: போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைன் ஆர்வம் காட்டவில்லை!! அமைதி பேச்சுவார்த்தை! புடின் குற்றச்சாட்டு!