ரஷ்யாவுடன் வணிகம் செய்தால் 500% வரி!! கடுமையான பொருளாதார தடை!! டிரம்ப் வார்னிங்!
ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் எந்த ஒரு நாடும் மிகக் கடுமையான பொருளாதார தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார் .
ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் அனைத்து நாடுகளுக்கும் “மிகக் கடுமையான பொருளாதார தடைகள்” விதிக்கப்படும் என நேற்று (நவம்பர் 17) கடுமையாக எச்சரித்துள்ளார்.
இதோடு, ரஷ்யாவின் எண்ணெய், வாயு, யூரேனியம் போன்றவற்றை வாங்கி மறுவிற்பனை செய்யும் நாடுகளுக்கு 500 சதவீத வரி விதிக்கும் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் இதன் தாக்கத்தில் வரலாம் என்பதால், உலக அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் மூன்றாம் ஆண்டைத் தொட்டும் தொடர்ந்து நடந்து வருகிறது. உலக நாடுகள் இதை முடிவுக்குக் கொண்டுவர பல்வேறு முயற்சிகளை எடுத்தபோதும், எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இந்தப் போரைத் தொடர்ந்து நடத்துவதற்கு ரஷ்யாவின் பொருளாதார உதவியைத் தடுக்க அமெரிக்கா முன்னெடுத்துள்ளது.
இதையும் படிங்க: திருப்பதி இலவச தரிசனத்தில் இனி இவர்களுக்கு முன்னுரிமை... டோக்கன் நடைமுறையில் அதிரடி மாற்றம்... தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!
ஏற்கனவே, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 50 சதவீத வரி விதித்த டிரம்ப், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதித்திருந்தார். இதன்பிறகும் போர் முடிவுக்கு வராத நிலையில், இப்போது மிகவும் கடுமையான நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.
பால்ம் பீச் சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் எந்த நாடும் மிகக் கடுமையான தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இது உண்மையான விளைவுகளை ஏற்படுத்தும்” என்று கூறினார். “இரானையும் இதில் சேர்க்கலாம்” என்றும் அவர் சேர்த்தார். இந்த எச்சரிக்கை, ரஷ்யாவின் போர் பொருளாதாரத்தை தனிமைப்படுத்தும் அமெரிக்க உத்தியின் ஒரு பகுதியாகும்.
இதற்கிடையே, அமெரிக்க செனட்டின் இரு கட்சிக் தலைவர்களான லிண்ட்சி கிராம் மற்றும் ரிச்சர்ட் பிளமென்தால் ஆகியோர், “2025 சான்க்ஷனிங் ரஷ்யா சட்டம்” என்ற பெயரில் ஒரு மசோதாவை தாக்கல் செய்துள்ளனர்.
இதில், ரஷ்யாவின் எண்ணெய், வாயு, யூரேனியம் போன்றவற்றை வாங்கி மறுவிற்பனை செய்யும் நாடுகளுக்கு 500 சதவீத வரி விதிக்கப்படும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு செனட்டில் 85 உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர். டிரம்ப் இதற்கு “இது எனக்கு ஓகே” என்று ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தச் சட்டம் நிறைவேறினால், ரஷ்யாவின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும்.
இந்தியாவுக்கு இதன் தாக்கம் பெரியது. ரஷ்யாவிடமிருந்து பெருமளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, ஏற்கனவே 50 சதவீத வரி சுமையை சந்தித்துள்ளது. இப்போது 500 சதவீத வரி வந்தால், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி செலவு விரட்டமாக உயரும்.
இதேபோல் சீனா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் உள்ளிட்டவையும் பாதிக்கப்படலாம். ரஷ்யா அதிபர் விளாதிமிர் புடின், “ஒரு சுயமரியாதை உள்ள நாடு அழுத்தத்திற்கு அடிபணியாது” என்று கூறி, இத்தடைகள் உலக எண்ணெய் விலையை உயர்த்தி அமெரிக்காவுக்கு திரும்பி தாக்கும் என்று எச்சரித்துள்ளார்.
இந்த எச்சரிக்கை, ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமெரிக்க உத்தியின் புதிய அத்தியாயமாகக் கருதப்படுகிறது. உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி இதை வரவேற்றுள்ளார். ஆனால், இத்தடைகள் உலகப் பொருளாதாரத்தை எப்படி பாதிக்கும் என்பது குறித்து நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மேலும் தீவிரம் அடைந்தது வடகிழக்கு பருவமழை!! 23 மாவட்டத்தில் கனமழை அலர்ட்! - வானிலை அப்டேட்!