மோடியை சந்திச்சு பேசுங்க CM..! மேகதாது பணியை தொடங்கிய கர்நாடகா..? டிடிவி தினகரன் எச்சரிக்கை..!!
மேகதாது விவகாரத்தில் பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று முதல்வரை விஜய் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டும் பணியை கர்நாடக அரசு தொடங்கியதாக தமிழக விவசாயிகள் புகார் தெரிவித்திருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாகக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் கர்நாடக அரசு மீது தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான அளவீட்டுப் பணிகளைத் தொடங்கியிருப்பதோடு, அப்பகுதிகளில் சட்டவிரோத கட்டுமானப் பணிகளையும் கர்நாடக அரசு மேற்கொண்டிருப்பதாக அங்கு நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்த தமிழக விவசாயிகள் குற்றம் சாட்டி இருப்பதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்து இருக்கிறார்.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கும் எதிராகச் செயல்படுவதோடு, தமிழகத்திற்கு தரவேண்டிய உரிய நீரை உரிய நேரத்தில் தர தொடர்ந்து மறுத்து வரும் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கம், தற்போது மேற்கொண்டிருக்கும் இந்த கட்டுமானப் பணிகளின் மூலம் மேகதாது அணையைக் கட்டும் முடிவிலிருந்து துளியளவும் பின்வாங்கப் போவதில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது என்றும் சாடினார்.
இதையும் படிங்க: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சாதிய அடையாள அட்டை..? அமைச்சர் பேச்சால் சர்ச்சை..! TTV தினகரன் ஆவேசம்..!
மேகதாது அணை கட்டுவதற்கான எந்தவொரு அனுமதியையும் கர்நாடக அரசுக்கு வழங்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலை என்னவென்று தெரியாத நிலையில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதில் காட்டும் தீவிரம் தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் டிடிவி தினகரன் விளக்கினார்.
மேகதாதுவில் ஒரு செங்கல்லைக் கூட வைக்க விடமாட்டோம் என தமிழக காங்கிரஸ் கட்சியினர் இங்கு வெற்று வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருக்கும் அதே வேளையில், மேகதாது பகுதிகளில் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கம் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியிருப்பதன் மூலம் காவிரி விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியை நம்பி எந்தவித பயனும் இல்லை என்பதை முதலமைச்சர் ஜோசப் விஜய் இனியாவது உணர வேண்டும் என்று எச்சரித்தார்.
எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக காவிரியில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டிருக்கும் கர்நாடக அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதோடு, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: "அத்துமீறும் ஆளுங்கட்சியினர்"..! பள்ளிக்கூடத்தில் இப்படியா..? TTV தினகரன் விளாசல்..!!