உங்கள் பிள்ளைகளையும் சாப்பிடச் சொல்லுங்கள்! பான், குட்கா விளம்பர நடிகர்களை வெளுத்து வாங்கிய அதிகாரி!
குறிப்பாக பான், குட்கா போன்றவற்றை விளம்பரப்படுத்துபவர்கள், அதன் தாக்கம் குறித்து சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மும்பை: பான் மசாலா, குட்கா உள்ளிட்ட உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்களின் விளம்பரங்களில் பிரபலங்கள் நடிப்பது தொடர்பாக மகாராஷ்டிரா உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் துக்காராம் முண்டே கடுமையான கருத்துகளை தெரிவித்துள்ளார். விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்கள் தங்களது பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
என்டிடிவி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துக்காராம் முண்டே, ஒரு பொருளை பிரபலப்படுத்துவதற்கு முன்பு அந்தப் பொருளின் தன்மை குறித்து பிரபலங்கள் சிந்திக்க வேண்டும் என்றார்.
குறிப்பாக பான், குட்கா போன்றவற்றை விளம்பரப்படுத்துபவர்கள், அதன் தாக்கம் குறித்து சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: டெங்குவை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு முக்கியம்! அமைச்சர் அருண்ராஜ் விடுத்த முக்கிய வேண்டுகோள்!
“நான் நடிகர் அல்லது நடிகை என்பதால் விளம்பரத்துக்கான பொறுப்பு எனக்கு இல்லை” என்று கூற முடியாது என்றும், தயாரிப்பாளருக்கு மட்டுமே பொறுப்பு உள்ளது என தப்பித்துக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார். விளம்பரத்தில் தோன்றும் பிரபலங்கள் சட்டபூர்வமான பொறுப்புடன் மட்டுமல்லாமல், தார்மீக பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்பதே அவரது கருத்தாக இருந்தது.
மேலும், சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தையோ அல்லது ‘சிஸ்டத்தை’ மட்டுமே குறை கூறுவது சரியல்ல என்றும் துக்காராம் முண்டே கூறினார். மாற்றத்தை ஏற்படுத்த பொதுமக்களும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் காரணமாக பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார். இதய நோய் உள்ளிட்ட பாதிப்புகளைத் தடுப்பதில் உணவுப் பழக்கவழக்கங்களுக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சட்டத்தை அமல்படுத்துவதிலும், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் தான் சமரசம் செய்துகொண்டதில்லை என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே, பான் மசாலா மற்றும் குட்கா தொடர்பான விளம்பரங்களில் நடித்ததாகக் கூறப்படும் நடிகர்கள் ஷாருக் கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோருக்கு துக்காராம் முண்டே தலைமையிலான துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபோன்ற விளம்பரங்களில் நடிப்பதைத் தவிர்க்கவும், சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட தொடர்புடைய பதிவுகளை அகற்றவும் அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
பிரபலங்கள் விளம்பரப்படுத்தும் பொருட்களின் தன்மை மற்றும் அதனால் ஏற்படக்கூடிய சமூக தாக்கம் குறித்த விவாதம் தொடர்ந்து வரும் நிலையில், துக்காராம் முண்டேவின் இந்த கருத்துகள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: பெற்றோர்களே கவனம்! 14 வயது மகள்களுக்கு இலவச HPV தடுப்பூசி – தமிழகத்திலும் தீவிரப்படுத்தப்படும் திட்டம்!!