தமிழ்நாடா? சுடுகாடா? எங்க போய் முடியப்போகுதோ... தவெக ஆவேசம்..!!
தமிழகத்தில் நடந்த பல்வேறு குற்ற சம்பவங்களை சுட்டிக்காட்டிய தமிழக வெற்றி கழகம் ஆட்சியின் மிகப்பெரிய தோல்வி எனவும் தெரிவித்தது.
ஒரே நாளில் நடந்த பல்வேறு குற்ற நிகழ்வுகளை தமிழக வெற்றி கழகம் அடிக்கோடிட்டு காட்டியுள்ளது. இது தமிழகமா அல்லது சுடுகாடா என்று கேள்வி எழுப்பி உள்ள தமிழக வெற்றிக்கழகம் திமுக அரசு முற்றிலும் தோல்வி அடைந்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. மானாமதுரையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஆகாஷ் உயிரிழந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி உள்ளது. விடியலைத் தேடியவனுக்குக் கிடைத்த மரண இருள் என்றும் காவல் நிலையத்திற்கு விசாரணைக்குச் சென்ற அந்த இளைஞன், பிணமாகத் தான் வீடு திரும்பியிருக்கிறான் எனவும் தெரிவித்தது.
அதிகாரத்தின் கரங்கள் ஒரு ஏழைத் தாயின் மகனை நசுக்கிக் கொன்றிருக்கின்றன., நீதியைக் காக்க வேண்டிய இடமே இப்படி மாறிப்போன இந்தக் கொடுமையைச் சொல்ல வார்த்தைகளே இல்லை என்றும் அந்தத் தாயின் கதறல் சத்தம் இந்த ஆட்சியாளர்களின் காதுகளில் விழவில்லையா எனவும் கேள்வி எழுப்பி உள்ளது. அடுத்த நிகழ்வாக, குடும்பத்தைக் காக்க வெயிலிலும் மழையிலும் ஆட்டோ ஓட்டி உழைத்த ஒரு சாதாரண மனிதன், மானாமதுரையில் கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், உழைக்கும் வர்க்கத்திற்குத் தெருவில் நடக்கக்கூடப் பாதுகாப்பு இல்லையா என்றும் ஒரு மனிதனின் உயிர் இவ்வளவு மலிவாகிப் போனதா., ரத்த ஆறாக ஓடும் தமிழகம் இன்று கண்ணீரில் மிதக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளது.
அடுத்து, திமுக இளைஞர் அணி நிர்வாகி காசிமேடு கவி மிரட்டலில், ஒரு சிறுமி என்று கூடப் பாராமல் எட்டி உதைத்த அந்தச் செயல் ஒவ்வொரு தந்தையின் நெஞ்சையும் ரணமாக்குகிறது என்று தெரிவித்தது. அதிகார போதை ஒரு பச்சிளம் குழந்தையைத் தாக்கும் அளவிற்குத் தலைக்கேறியுள்ளதா என்றும் பெண் குழந்தைகளைக் காப்போம் என்று மேடைக்கு மேடை முழங்குபவர்கள், இப்போது எங்கே போனார்கள் எனவும் கேள்வி எழுப்பியது. நாமக்கல்லில் விளையாட வேண்டிய வயதில் கடத்தப்பட்டு, ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆலாக்கப்பட்டு இருப்பதாகவும் அந்தப் பிஞ்சு உடலும் உள்ளமும் பட்ட வேதனையை நினைத்தாலே கண்கள் குளமாகின்றன., இத்தகைய மிருகங்கள் நடமாடும் நிலமாகத் தமிழகம் மாறிவிட்டது என்பதை நினைக்கையில் நெஞ்சம் குமுறுகிறது இன்று தமிழக வெற்றி கழகம் ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: எங்கும் போதைப் பொருள்... எப்பொழுதும் அரசியல் காழ்ப்புணர்ச்சி... தவெக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!!
அடுத்ததாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தோட்டத்து வீட்டில் வாழ்ந்து வந்த 70 வயது முதியவரை துடிக்க துடிக்க கொன்று அவரது அறுபது வயது மனைவியை வன்கொடுமை செய்த சம்பவத்தை சுட்டிக்காட்டி உள்ளது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எந்தப் பாதாளத்தில் இருக்கிறது என்பதற்குச் சாட்சி என்றும் முதுமைக் காலத்தில் துணையாக இருக்க வேண்டிய வீடே, ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்பற்ற சுடுகாடாக மாறியிருப்பது இந்த ஆட்சியின் மிகப்பெரிய தோல்வி இல்லையா எனவும் தமிழ்நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது எனவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பொண்டாட்டியவே காப்பாத்தல... மக்களை காப்பாற்றுவாரா? தவெக ரஞ்சனா கடும் தாக்கு..!!