×
 

SIR ஐ பயன்படுத்தி பாஜகவுக்கு எதிரான வாக்குகளை நீக்க முயற்சி... ஓபனாக பேசிய துணை முதல்வர்...!

SIR ஐ பயன்படுத்தி பாஜகவுக்கு எதிரான வாக்குகளை நீக்க முயற்சி செய்து வருவதாக பாஜக மீது உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

இந்திய அரசியல் களத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. இது தேர்தல் செயல்முறையின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கு அவசியமானது. இருப்பினும், சமீபத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கல், திருத்தம் மற்றும் இறந்தவர்கள் அல்லது இடம்பெயர்ந்தவர்களின் பெயர்களை அகற்றுதல் போன்றவற்றை உள்ளடக்கியவை திருத்த பணிகளாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த செயல்முறை மூலம், தேர்தல் நடைமுறைகள் வெளிப்படையாகவும், நியாயமாகவும் நடைபெறுவது உறுதி செய்யப்படுகிறது.

ஆனால், சில சமயங்களில் இந்தப் பணிகள் அரசியல் கட்சிகளிடையே சர்ச்சைகளை உருவாக்குவதுண்டு. தேர்தல் ஆணையம் மத்திய பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் முறைகேடுகள் நடைபெறும் இடமும் கூறி எதிர்க்கட்சிகள் சிறப்பு வாக்காளர் திருத்தத்தை எதிர்த்து வருகின்றன. பீகாரில் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் திருத்தத்தில் 65 லட்சத்திற்கும் மேலான மக்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த சிறப்பு வாக்காளர் திருத்தத்தை தமிழக அரசும் எதிர்த்து வருகிறது.

ஆனால் நாடு முழுவதும் சிறப்பு வாக்காளர் திருத்தம் நடத்தப்படும் என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த மாதம் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் SIR பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்பட இருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் கொடுத்தது. இதனிடையே, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் தமிழக சட்டப்பேரவை தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி நடைபெறுவதாக பல அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளது. முதலமைச்சர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தியது.

இதையும் படிங்க: பஹ்ரைனில் நடந்த கபடி போட்டியில் தங்க பதக்கங்கள்... நமக்கெல்லாம் பெருமை... துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்...!

அதன்படி இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே செய்தியாளர்களிடம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது, SIR மூலம் பா.ஜ.க.விற்கு பாதகமான வாக்குகளை நீக்க முயற்சி நடப்பதாக தெரிவித்தார். பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் என்ன நடந்தது என்பது தெரியும் என்று தெரிவித்தார். SIR-ஐ பயன்படுத்தி தமிழ்நாட்டில் எப்படியாவது வெல்ல வேண்டும் என பா.ஜ.க நினைத்து வருவதாக விமர்சித்தார்.

இது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவாதித்து முதலமைச்சர் உறுதியான முடிவெடுப்பார் என்றும் சென்னையில் தற்போது சாலைகள் செப்பனிடும் பணி நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க.வில் நடந்து கொண்டிருப்பது உட்கட்சி விவகாரம் என்றும் ஆனால், அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச் செயலாளராக இ.பி.எஸ். இருக்க வேண்டும் என்றும் கூறினார். 

இதையும் படிங்க: யாரை எதிர்த்து போராடுகிறீர்கள்? ஆளுநர் ரவிக்கு பதிலடி கொடுத்த உதயநிதி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share