காசாவில் இஸ்ரேல் நடத்துவது இனப்படுகொலை!! சாட்டையை சுழற்றும் ஐ.நா., விசாரணை ஆணையம்!
காசா மீது இஸ்ரேல் நடத்தியது இனப்படுகொலை என, ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
காசா மீது இஸ்ரேல் நடத்திய ராணுவ நடவடிக்கைகள் இனப்படுகொலை என, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் அமைத்த விசாரணை ஆணையம், 72 பக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2023 அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் தாக்குதலுக்கு பிறகு தொடங்கிய போர், காசாவில் 65,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களின் உயிரிழப்புக்கு காரணமானது. இந்த அறிக்கை, சர்வதேச சட்டத்தின் கீழ் இஸ்ரேலின் செயல்கள் 'இனப்படுகொலை' என்பதற்கான முதல் அதிகாரப்பூர்வ ஐ.நா. கண்டனமாக அமைந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான மோதல், காசாவை முற்றுகையிட்டு, பொதுமக்களை இலக்காக்கியது. 2021ல் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் அமைத்த சுயாதீன சர்வதேச விசாரணை ஆணையம் (COI), நவி பில்லே (முன்னாள் ஐ.நா. உயர் அதிகாரி) தலைமையில், 2023 அக்டோபர் 7 முதல் 2025 ஜூலை 31 வரையிலான நிகழ்வுகளை ஆராய்ந்தது.
இதையும் படிங்க: முதல்வரையே கேலி பண்ணுவீங்களா? STOP IT விஜய்! வைகோ காட்டம்
1948 இனப்படுகொலை தடுப்பு ஒப்பந்தத்தின் ஐந்து செயல்களில் நான்கில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது: குழுவினரை கொல்வது, கடுமையான உடல்-மன தீங்கு விளைவிப்பது, குழுவை அழிக்கும் நிபந்தனைகள் விதிப்பது, பிறப்புகளைத் தடுப்பது.
இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் படைகள், பாலஸ்தீனியர்களை 'இன-மத குழுவாக' அழிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டுள்ளனர் என்பதற்கு 'இனப்படுகொலை நோக்கம்' (genocidal intent) உள்ளது என ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.
ஐநா அறிக்கை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அதிபர் ஐசக் ஹெர்சோக், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலண்ட் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளின் அறிக்கைக்களை சான்றாகக் காட்டுகிறது. இவர்கள், பாலஸ்தீனியர்களை 'மனிதர்கள் இல்லை' என வகைப்படுத்தி, 'அழித்தல்' போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
காசாவின் முற்றுகை, மனிதாபிமான உதவிகளைத் தடுத்தல், பட்டினி ஏற்படுத்துதல், சுகாதார-கல்வி வசதிகளைத் திட்டமிட்டு அழித்தல் – இவை அனைத்தும் இனப்படுகொலை நோக்கத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளன. 2025 ஜூலை வரை, 46% கொல்லப்பட்டவர்கள் பெண்கள்-குழந்தைகள்; 90% வீடுகள் அழிக்கப்பட்டன; காசா நகரில் பஞ்சம் அறிவிக்கப்பட்டது.
இஸ்ரேல் அரசுதான் இந்த இனப்படுகொலைக்கு முழு பொறுப்பு என ஆணையம் கூறுகிறது. சர்வதேச சமூகம், இனப்படுகொலையைத் தடுக்கவும், பொறுப்பாளர்களை தண்டிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்ரேலுக்கு ஆயுதங்கள், ராணுவ உபகரணங்கள் அனுப்புவதை ஐ.நா. உறுப்பு நாடுகள் நிறுத்த வேண்டும்.
உடனடி நிரந்தர போர் நிறுத்தம், முற்றுகை நீக்கம், மனிதாபிமான உதவிகளுக்கு தடையின்றி அனுமதி – இவற்றை அழைப்பு விடுக்கிறது. அம்னெஸ்டி இன்டர்னேஷனல், "இந்த அறிக்கை, இஸ்ரேலின் அழிவு பிரச்சாரத்தை உறுதிப்படுத்துகிறது" என ஆதரித்துள்ளது.
இஸ்ரேல் இந்தக் குற்றச்சாட்டுகளை 'தவறானவை, ஹமாஸ் ஆதரவு' என மறுத்துள்ளது. அறிக்கை, 'இனவெறி பொய்கள்' என விமர்சித்து, ராணுவ நடவடிக்கைகள் ஹமாஸை ஒழிப்பதற்கும், தற்காப்புக்காகவும், சர்வதேச சட்டத்தின்படியும் நடக்கின்றன என வாதிடுகிறது. ஐ.நா. விச்சாரணை ஆணைய உறுப்பினர்கள் 'ஹமாஸ் ஆதாரவாளர்கள்' என குற்றம் சாட்டியுள்ளது. ஹமாஸின் 2023 அக்டோபர் 7 தாக்குதலில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்; 251 பேர் பிணையாளர்களாகப் பிடுபட்டனர்.
இந்த அறிக்கை, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 60ஆவது அமர்வில் விவாதிக்கப்படும். அமெரிக்கா, இஸ்ரேலின் ஆதரவாளராக, கவுன்சிலிலிருந்து விலகியுள்ளது. தென்னாப்பிரிக்காவின் ஐ.சி.ஜே. வழக்கு, இ.சி.சி. விசாரணைகளுக்கு இது சான்றாக அமையும்.
அம்னெஸ்டி, ஐ.நா. நிபுணர்கள் உள்ளிட்ட பலர், காசாவில் இனப்படுகொலை நடக்கிறது என கூறிவந்தனர். இந்த அறிக்கை, உலக அரங்கில் புதிய அழுத்தத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அமெரிக்கா கிடக்குது! மோடியின் புதிய பிசினஸ் ப்ளான்! டென்மார்க் பிரதமருடன் பேச்சு! ட்ரம்புக்கு கல்தா!