அடுத்த ஷாக் கொடுத்த டிரம்ப் அரசு..!! இந்தியாவுக்கு 500% வரி.. புதிய மசோதா தாக்கல்..!
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500% வரி விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் அதிபராக 2வது முறை பொறுப்பேற்றபின் அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கும் வகையில் உலக நாடுகள் மீது பரஸ்பர வரிவிதிப்பை விதித்து வருகிறார். இதில் சீனாவுக்கு அதிகபட்சமாக 145 சதவீத வரியை விதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்கா பொருட்களுக்கு அதிக வரிவிதிக்கும் நாடுகளுக்கு அதிக வரியும், குறைவான வரிவிதிக்கும் நாடுகளுக்கு குறைந்தவரியும் விதித்துள்ளார். அந்த வகையில் இந்தியாவுக்கு 26 சதவீதம் வரி விதித்துள்ளார்.
தற்போது அந்த வரி விதிப்பை டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் ரஷியாவுடன் வர்த்தகத்தை தொடர்ந்தால் இந்தியாவுக்கு 500% வரி விதிக்கப்படலாம் என்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்க செனட்டில் மசோதா ஒன்று முன்மொழியப்பட்டது. இந்த மசோதாவை அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரகாம் அறிமுகப்படுத்தினார். மேலும் இது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவைப் பெற்றுள்ளது. உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யாவை தனிமைப்படுத்தி அமைதி பேச்சுவார்த்தைக்கு அழுத்தம் கொடுப்பதே இதன் நோக்கமாகும்.
இதையும் படிங்க: உக்ரைனை கைவிட்டது அமெரிக்கா!! தனித்து விடப்பட்ட ஜெலன்ஸ்கி.. ஆட்டத்தை துவங்கும் புடின்..!
இந்த மசோதாவின்படி, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய், எரிவாயு அல்லது பெட்ரோகெமிக்கல் பொருட்கள் வாங்கும் நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்காவில் 500% வரை வரி விதிக்கப்படலாம். இந்தியாவும் சீனாவும் ரஷ்ய எண்ணெயில் 70% வாங்குவதாகவும், இதனால் ரஷ்யாவின் போர் முயற்சிகளுக்கு மறைமுகமாக உதவுவதாகவும் அமெரிக்க செனட்டர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் உலகில் அதிக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் மூன்றாவது நாடாக இந்தியா உள்ள நிலையில், 2022-ல் உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை 40-44% வரை அதிகரித்துள்ளது. இந்த மசோதா நிறைவேறினால், இந்தியாவின் மருந்து, ஆடை, மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் போன்ற பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும்போது மிகப்பெரிய வரி செலுத்த வேண்டியிருக்கும். இதனால் இந்தியாவின் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படலாம்.
இந்த மசோதா ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதால், இந்த மசோதா இந்தியாவுடனான உறவுகளையும் பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடும். மேலும் இந்தியா ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் எண்ணெய் வாங்குவதன் மூலம் பல பில்லியன் டாலர்களை சேமித்துள்ளதாகவும், இது இந்திய பொருளாதாரத்துக்கு முக்கியமானதாகவும் கருதப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 84 செனட்டர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இந்த மசோதா குறித்து அமெரிக்க செனட்டர் கிரகாமிடம் பேசியுள்ளார். இந்தியாவுக்கு எரிசக்தி பாதுகாப்பு மிக முக்கியம் என்றும், இந்த மசோதா இந்தியாவின் நலன்களை பாதிக்கலாம் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
இதையும் படிங்க: 477 ட்ரோன்கள்.. 60 ஏவுகணைகள்.. கதிகலங்கிய உக்ரைன்.. கனவிலும் நினைக்காத பேரிடி கொடுத்த ரஷ்யா..!