கிரீன்லாந்து வாங்க திட்டம்: அமெரிக்காவின் ஆசைக்கு மக்கள் கடும் எதிர்ப்பு.. நேட்டோவுக்கு ஆபத்து?
வலுக்கட்டாயமாக கிரீன்லாந்தை அமெரிக்கா இணைத்தால், நேட்டோ கூட்டணி முடிவுக்கு வரும் என்றும் சொல்லப்படுகிறது.
வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையே அமைந்துள்ள பனி சூழ்ந்த கிரீன்லாந்து தீவு, ஏராளமான இயற்கை வளங்களால் நிரம்பியுள்ளது. குறிப்பாக எண்ணெய் வளம் மற்றும் அரிய தாதுக்களால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதனை விலைக்கு வாங்க அல்லது இணைக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு கிரீன்லாந்து மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வலுக்கட்டாய இணைப்பு ஏற்பட்டால், நேட்டோ கூட்டணி சீர்குலைந்து முடிவுக்கு வரலாம் என எச்சரிக்கைகள் எழுந்துள்ளன.
கிரீன்லாந்து மக்கள், "நாங்கள் அமெரிக்க ஆளுகைக்கு உட்பட விரும்பவில்லை. எங்கள் நாடு விற்பனைப் பொருள் அல்ல" என திட்டவட்டமாகக் கூறியுள்ளனர். பெரும்பாலான உள்ளூர்வாசிகள் டிரம்பின் இந்த யோசனையை கடுமையாகக் கண்டித்துள்ளனர். நூற்றாண்டுகளாக டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தத் தீவை, அமெரிக்கா தீவிரமாக கைப்பற்ற முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தேவைப்பட்டால் பலவந்தமாக இணைக்கத் தயார் என டிரம்ப் மற்றும் அவரது அதிகாரிகள் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளனர். இது உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தில் வசிக்கும் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: எனக்கு கிரீன்லாந்து பகுதி கண்டிப்பாக வேண்டும்..!! அடம்பிடிக்கும் டிரம்ப்..!!
சமீபத்தில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை போதைப்பொருள் கடத்தல் மற்றும் தீவிரவாத குற்றச்சாட்டுகளில் அமெரிக்கா கைது செய்து கடத்திய நிகழ்வு, கிரீன்லாந்து மக்களிடம் மேலும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத இராணுவ நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. இதன்பின், "கிரீன்லாந்துதான் அடுத்த இலக்கு" என அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் உள்ளன.
இதுகுறித்து பேசிய உள்ளூர் மக்கள், "வெனிசுலா சம்பவத்தைப் பார்த்தபின், அமெரிக்காவின் திட்டம் விளையாட்டல்ல என்பது புரிந்தது. எங்கள் மனதில் பதற்றம் நிறைந்துள்ளது எனக் கூறியுள்ளனர். டென்மார்க் நாடாளுமன்றத்தில் கிரீன்லாந்து எம்பி ஆஜா செம்னிட்ஸ், "டிரம்ப் நிர்வாகத்தின் கருத்துகள் தெளிவான அச்சுறுத்தல். எங்கள் நாட்டையும் நேட்டோ உறுப்பு நாட்டையும் இணைக்க மறுப்பது மரியாதையற்றது. நாங்கள் கைவிடப்பட்டதாக உணர்கிறோம்" எனக் கண்டித்துள்ளார்.
கிரீன்லாந்து உலகின் குறைந்த மக்கள்தொகை கொண்ட பிரதேசம். பெரும்பகுதி பனியால் சூழ்ந்துள்ளதால், மக்கள் தலைநகர் நூக் மற்றும் தென்மேற்கு கடற்கரையில் வசிக்கின்றனர். ஆனால் அமெரிக்காவுக்கு இது மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் அங்கு இராணுவ தளம் அமைத்துள்ளது. வட அமெரிக்கா மற்றும் ஆர்க்டிக் இடையே அமைந்திருப்பதால், ஏவுகணை எச்சரிக்கை அமைப்புகளுக்கு ஏற்ற இடம். காலநிலை மாற்றத்தால் பனி உருகி, இயற்கை வளங்கள் அணுக எளிதாகிவருவதால், அமெரிக்கா ஆர்வம் காட்டுகிறது.
இராணுவ ரீதியாக கைப்பற்றல் அமெரிக்காவுக்கு எளிது என்றாலும், அது புவிசார் அரசியல் பிரச்சினைகளை உருவாக்கி நேட்டோவை அழிக்கும். அமெரிக்கா பேசத் தொடங்கியபின், 6 ஐரோப்பிய நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டு, "கிரீன்லாந்தின் எதிர்காலத்தை அதன் மக்களே தீர்மானிக்க வேண்டும்" என வலியுறுத்தின. கிரீன்லாந்து நேட்டோ உறுப்பினர்; பலவந்த இணைப்பு ஏற்பட்டால், மற்ற நாடுகளுக்கும் ஆபத்து என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதையும் படிங்க: எனக்கு கிரீன்லாந்து பகுதி கண்டிப்பாக வேண்டும்..!! அடம்பிடிக்கும் டிரம்ப்..!!