மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் டிரம்ப்.. ரஷியாவுடன் வர்த்தகத்தை தொடர்ந்தால் இந்தியாவுக்கு இவ்ளோ வரியா..!!
ரஷியாவுடன் வர்த்தகத்தை தொடர்ந்தால் இந்தியாவுக்கு 500% வரி விதிக்கப்படலாம் என்று அமெரிக்க செனட்டில் மசோதா ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அதிபராக 2வது முறை பொறுப்பேற்றபின் அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கும் வகையில் உலக நாடுகள் மீது பரஸ்பர வரிவிதிப்பை விதித்து வருகிறார். இதில் சீனாவுக்கு அதிகபட்சமாக 145 சதவீத வரியை விதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்கா பொருட்களுக்கு அதிக வரிவிதிக்கும் நாடுகளுக்கு அதிக வரியும், குறைவான வரிவிதிக்கும் நாடுகளுக்கு குறைந்தவரியும் விதித்துள்ளார். அந்த வகையில் இந்தியாவுக்கு 26 சதவீதம் வரி விதித்துள்ளார்.
தற்போது அந்த வரி விதிப்பை டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் ரஷியாவுடன் வர்த்தகத்தை தொடர்ந்தால் இந்தியாவுக்கு 500% வரி விதிக்கப்படலாம் என்று அமெரிக்க செனட்டில் மசோதா ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது. இந்த மசோதாவை அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரகாம் அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் இது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவைப் பெற்றுள்ளது. உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யாவை தனிமைப்படுத்தி அமைதி பேச்சுவார்த்தைக்கு அழுத்தம் கொடுப்பதே இதன் நோக்கமாகும்.
இதையும் படிங்க: மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்.. எங்க ஒளிஞ்சாலும் தேடி வந்து அடிப்போம்.. ஜெய்சங்கர் திட்டவட்டம்..!
இந்த மசோதாவின்படி, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய், எரிவாயு அல்லது பெட்ரோகெமிக்கல் பொருட்கள் வாங்கும் நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்காவில் 500% வரை வரி விதிக்கப்படலாம். இந்தியாவும் சீனாவும் ரஷ்ய எண்ணெயில் 70% வாங்குவதாகவும், இதனால் ரஷ்யாவின் போர் முயற்சிகளுக்கு மறைமுகமாக உதவுவதாகவும் அமெரிக்க செனட்டர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த மசோதா ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதால், இந்த மசோதா இந்தியாவுடனான உறவுகளையும் பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடும். மேலும் இந்தியா ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் எண்ணெய் வாங்குவதன் மூலம் பல பில்லியன் டாலர்களை சேமித்துள்ளதாகவும், இது இந்திய பொருளாதாரத்துக்கு முக்கியமானதாகவும் கருதப்படுகிறது.
இந்த மசோதா இன்னும் இறுதி செய்யப்படவில்லை, மேலும் இதற்கு 84 அமெரிக்க எம்பிக்களின் ஆதரவு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து இந்திய அரசு இதுவரை அதிகாரப்பூர்வ பதிலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவை வம்புக்கு இழுக்கும் பாக்., தளபதி.. மீண்டும் காஷ்மீர் பிரச்னையை தூண்டிவிட திட்டம்..!