ஈரானுக்கு இதான் லாஸ்ட் வார்னிங்.. கொஞ்சமும் லேட் பண்ணாதீங்க.. கடுகடுக்கும் அமெரிக்கா..!
சர்வதேச அணுசக்தி அமைப்புக்கு, கொஞ்சம் கூட தாமதிக்காமல், முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அணு ஆயுத தயாரிப்பை கைவிட மறுத்து வந்த ஈரான் மீது பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி கடந்த 13ம் தேதி இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. ஈரானின் ராணுவ மையங்கள், அணு ஆயுத கூடங்களை குறி வைத்து அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசியது. இஸ்ரேலின் தொடர் தாக்குதலில், ஈரானின் பல ராணுவ தளபதிகள், பல அணு விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டனர்.
பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. ஒரு வாரமாக போர் தொடர்ந்த நிலையில், ஞாயிறன்று ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் போரில் குதித்தது. ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் அணு உலைகள் மீது அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தின. அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக கத்தார் நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணைகளை வீசியது.
இதனால் மத்திய கிழக்கில் நிலவி வந்த பதட்டம் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், 25ம் தேதி இஸ்ரேல் – ஈரான் போர் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் அமெரிக்காவை ஈரான் வென்றதற்கு எனது வாழ்த்துகள் என ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி தெரிவித்தார். இஸ்ரேல் முற்றிலும் அழிந்துவிடும் என்று உணர்ந்ததால் தான் போரில் அமெரிக்கா நேரடியாக நுழைந்தது.
இதையும் படிங்க: அணுசக்தி ஒத்துழைப்பு இடைநிறுத்தம்! புது பேரழிவை நோக்கி நகர்கிறதா ஈரான்? உலக நாடுகள் அச்சம்..!
ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி மையங்களான போர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் ஆகியவை தாக்கப்பட்டதாக அமெரிக்காவும், இஸ்ரேலும் கூறுகின்றன. ஆனால், இந்த தாக்குதல்களுக்கு முன்பாகவே, 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பாதுகாப்பான இடத்துக்கு ஈரான் மாற்றியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதில் இருந்து, 10 அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும் என்று கூறப்படுகிறது. தற்போது ஈரான் அணுஆயுத திட்டங்களை சீரமைத்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் ஐ.நா.வின் அணுசக்தி காண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒத்துழைப்பை இடைநிறுத்தம் செய்து ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன் உத்தரவிட்டுள்ளார். ஈரான் பார்லிமென்டில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அதிபர் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த நிலையில், சர்வதேச அணுசக்தி அமைப்புக்கு, கொஞ்சம் கூட தாமதிக்காமல், முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் டாமி ப்ரூஸ் கூறியதாவது;
ஈரான் தனது போக்கை மாற்றி, அமைதி மற்றும் செழிப்பின் பாதையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கும் இந்த நேரத்தில், அணுசக்தி முகமையுடனான ஒத்துழைப்பை நிறுத்திக்கொள்வது ஏற்க முடியாதது. ஈரான் மேலும் தாமதமின்றி, முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.
அணுகுண்டுகள் இல்லாத ஒரே நாடாக, 60 சதவீதம் வரை செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்த நாடு ஈரான் தான். ஈரான் அணு ஆயுதப் பரவலைத் தடுப்பு ஒப்பந்தத்தின் கீழ் தேவைப்படும் பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஈரான் முழுமையாக பின்பற்ற வேண்டும், எனக் கூறினார்.
இதையும் படிங்க: இஸ்ரேலை சமாதனப்படுத்திய அமெரிக்கா.. காசா மக்களுக்கு ஆறுதல் நிம்மதி.. போர் நிறுத்தம் சாத்தியமா?