வரிப்பணத்தில் அருட்கொடையா? இப்படி ஒரு அரசியல் பிழைப்பு... வெளுத்து வாங்கிய முன்னாள் அமைச்சர் வளர்மதி..!
மக்கள் வரிப்பணத்தில் பணத்தை கொடுத்து அருட்கொடை என்று அரசியல் பிழைப்பு நடத்துவதாக வளர்மதி விமர்சனம் செய்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்கு ஒரு முக்கியமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பெண்களுக்கு கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2,000 வழங்கப்பட்டது பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், அதேபோன்று முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு "நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதி" என்ற பெயரில் ரூ.2,000-ஐ மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைத்துள்ளார்.
மேலும், 5.92 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.3,500-உம், பராமரிப்பு உதவித்தொகை பெறும் 2.58 லட்சம் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.4,000-உம் இன்று காலை வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஓட்டுப் பெட்டியின் சத்தம் கேட்கையில் திடீர் கருணை உதித்திருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி விமர்சனம் செய்துள்ளார். ஐந்து ஆண்டு காலம் அரியணை அமர்ந்து அதிகார போதையில் இருந்தவர்க்கு, இன்று தான் அடிதட்டு மக்களின் கண்ணீர் கண்ணுக்குத் தெரிகிறது என்றார்.
மக்களிடம் கனவைச் சொல்லச் சொல்லிக் கேட்டீர்கள் என்றும் தூங்கினால் வருவதுதானே கனவு மக்கள் தூக்கத்திலேயே இருக்கவேண்டும் என்பதுதானே உங்கள் கனவு என்றும் கூறினார். போதைக்குப் பாதை திறந்து விட்டது அதனால்தானோ என்று கேட்டுள்ளார். கையிலிருப்பதை வழங்கிட கணக்குகள் தேவையில்லை தான்., ஆனால், தேர்தல் நேரம் தெரிந்து வழங்குவதில் கள்ளத்தனம் தெரிகிறதே என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நீயெல்லாம் செத்தவன்தான்... கல்லறை கல்லும் காரித் துப்பும்..! OPS- ஐ விளாசிய வளர்மதி..!!
முதியோர் கேட்டபோது முடங்கிக் கிடந்த நிதி., கைம்பெண்கள் கதறியபோது கறைபடிந்து நின்ற மௌனம். மாற்றுத்திறனாளிகள் மன்றாடியபோது மறுக்கப்பட்ட உரிமைகள் இன்று எந்தத் திட்டமிடலும் இன்றி வங்கிக் கணக்கில் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பு என்ற பெயரில் வந்து விழுவதாக தெரிவித்தார். தேயிலை விவசாயியின் தேகத்தில் வழிந்த வியர்வைக்கு இத்தனை காலம் தராத "ஆதார விலை", இன்று "ஆதரவு விலை"யாக மாறுகிறது இதற்குப் பெயர் மக்கள் நலன் இல்லை என்றும் ஆளுங்கட்சியின் முகத்தில் வழியும் தோல்வி பயம் என்றும் தெரிவித்தார். மக்கள் வரி பணத்தை மக்களுக்கு திருப்பித் தருவதை அருட்கொடை என்று சொல்லி அரசியல் பிழைப்பு நடத்துவதாகவும் பணம் பாயும் வேகத்தை விட உள்ளத்தில் படரும் பயத்தின் வேகம் பெரியது தான் என்பது தெளிவாக தெரிகிறது எனவும் வளர்மதி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வாய் கிழிய சமத்துவம் பேசுது திமுக..! நாங்குநேரியில் நிகழ்ந்த கொடூரம்..!! அதிமுக விளாசல்..!!