வெனிசுலாவை உலுக்கிய பேரழிவு! பலி 4,333 ஆக உயர்வு.. ஆயிரக்கணக்கானோர் மாயம்!
வெனிசுவேலா நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் பலியானவர்களின் எண்ணிக்கை 4,333 ஆக உயர்ந்துள்ளது.
வெனிசுவேலாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கங்களின் தாக்கம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. கடந்த ஜூன் 24-ஆம் தேதி அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு பெரிய நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 4,333 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஜூன் 24-ஆம் தேதி வெனிசுவேலாவில் 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பல நகரங்களை கடுமையாக பாதித்தன. இந்த நிலநடுக்கங்களால் ஆயிரக்கணக்கான வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் பல்வேறு கட்டடங்கள் இடிந்து தரைமட்டமானதால் ஏராளமான மக்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதனால் நாடு முழுவதும் பெரும் சோக நிலை ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட உடனே மீட்புக் குழுவினர், ராணுவத்தினர் மற்றும் அவசரகால உதவிப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: ஆப்ரேஷன் அமிஸ்தாத் திட்டம்! நிலநடுக்கத்தால் உருக்குலைந்த வெனிசுலாவுக்கு இந்தியா ஆதரவுக்கரம்!
இதுவரை 6,462 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் மாயமானவர்களின் பட்டியலில் இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்த பேரிடரைத் தொடர்ந்து உலக நாடுகள் வெனிசுவேலாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன. இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் அவசர நிவாரணப் பொருட்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அனுப்பியுள்ளன. மேலும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ராணுவம் மற்றும் சிறப்பு மீட்புக் குழுக்கள் அங்கு முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம், குடிநீர் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் இன்னும் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்ற கவலை சர்வதேச அளவில் நிலவி வருகிறது.
இதையும் படிங்க: வெனிசுலாவில் மீண்டும் நிலநடுக்கம்! அதிகரிக்கும் உயிரிழப்பு! மீளாத்துயரில் சிக்கி உழலும் மக்கள்!!