×
 

ஸ்டைலா? சென்டிமென்ட்டா? வெள்ளிக்கிழமை விஜய் அணியும் பட்டு வேட்டி, சட்டையின் பின்னணி!

சில சமயங்களில் சாதாரண சட்டையுடன் மட்டும் பொதுமக்களிடையே தோன்றினார். 

தமிழக முதல்வராகப் விஜய் பொறுப்பேற்றதிலிருந்து அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடையலங்காரமும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தலைமைச் செயலகத்திற்கு வரும் போது பட்டு சட்டை மற்றும் வெள்ளை வேஷ்டி அணிந்து வருவதை முதல்வர் விஜய் வழக்கமாக்கியுள்ளார். இந்த வாராந்திர உடை மாற்றம் அவரது தனிப்பட்ட செண்டிமெண்ட்டாகப் பார்க்கப்படுகிறது.

பொது நாட்களில் முதல்வர் வெவ்வேறு உடைகளை அணிந்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை மட்டும் இந்த பாரம்பரியத்தைத் தவறாமல் கடைப்பிடிப்பது குறிப்பிடத்தக்கது. ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் மாதம் முழுவதும் அவர் கருப்பு கோட் சூட் அணிவதையே விருப்பமாகக் கொண்டிருந்தார். பின்னர் வெள்ளை சட்டைக்கு மாறினார். சில சமயங்களில் சாதாரண சட்டையுடன் மட்டும் பொதுமக்களிடையே தோன்றினார். 

எனினும், வெள்ளிக்கிழமை என்றால் வேஷ்டி-சட்டை கட்டாயம். இந்த ஒழுங்கு இதுவரை மாறவில்லை. இந்த வெள்ளிக்கிழமை உடைப் பழக்கத்திற்குப் பின்னணியில் முதல்வரின் ஆஸ்தான ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டிட் இருக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தவெக ஆட்சி அமைந்ததும் ரிக்கி ராதன் பண்டிட்டுக்கு முதல்வரின் சிறப்பு தனி அதிகாரி பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே எழுந்த கடும் எதிர்ப்பால் அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. 

இதையும் படிங்க: CM விஜய் மௌன புரட்சி செய்வதில் வல்லவர்..! அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம்... EPS எச்சரிக்கை..!!

இருப்பினும், ரிக்கி ராதன் தவெகவின் முக்கிய முகமாகத் தொடர்ந்து செயல்படுகிறார். தேசிய தொலைக்காட்சிகளில் கட்சி சார்பில் பேட்டி அளிப்பவராகவும் அவர் அடிக்கடி தோன்றுகிறார். விஜய்யின் ஜோதிட நம்பிக்கை எப்போதும் அதிகம் என அறியப்படும். தவெகவைத் தொடங்கிய காலத்தில் வெள்ளை சட்டை மற்றும் காக்கி பேண்ட் என்ற எளிய உடையில் தோன்றிய அவர், ஆட்சிக்கு வந்த பின் கோட் சூட், வேஷ்டி-சட்டை என உடைப் பாணியை மாற்றியுள்ளார். இதனால் அவரது ஜோதிட ஆலோசனைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

சமூக ஊடகங்களில் “அரஜகா பொட்டு” உள்ளிட்ட ட்ரெண்டுகள் இந்த விவாதத்தை மேலும் தூண்டுகின்றன. முதல்வரின் இந்த தனிப்பட்ட பழக்கங்கள் அவரது ஆளுமையின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகின்றன. இருப்பினும், அரசியல் எதிர்ப்பாளர்கள் இதை “அறிவியல் சிந்தனைக்கு மாறானது” என விமர்சிக்கின்றனர். 

தவெகவினரோ இதை முதல்வரின் தனிப்பட்ட நம்பிக்கை என்று பாதுகாக்கின்றனர். எப்படியிருந்தாலும், முதல்வர் விஜய்யின் ஒவ்வொரு அசைவும் தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறிவரும் சூழலில், இந்த வெள்ளிக்கிழமை செண்டிமெண்ட் நீண்ட காலத்துக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கர்நாடகா விசிட்... காலையிலேயே சி.எம்.விஜய் எடுத்த அதிரடி முடிவு... பரபரக்கும் தலைமைச் செயலகம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share