×
 

நடிகர் விக்ரம் வீடியோவால் சர்ச்சை! சிக்கியதா மிகப்பெரிய வனவிலங்கு கடத்தல் கும்பல்? புதிய ட்விஸ்ட்!

நடிகர் விக்ரம் வெளியிட்ட வீடியோவால் அரிய வகை உயிரினங்கள் கடத்தல் கும்பலின் சட்டவிரோத செயல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

ஈரோடு: நடிகர் விக்ரம் அரிய வகை லார் கிப்பன் குரங்கு குட்டியுடன் வெளியிட்ட வீடியோ ஏற்படுத்திய சர்ச்சை, தற்போது வனத்துறை விசாரணை வரை சென்றுள்ளது. ஈரோட்டில் உள்ள பண்ணையில் இருந்து அந்த குரங்கு வாங்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், அங்கு வளர்க்கப்பட்டு வரும் அரிய வகை விலங்குகள் தொடர்பான ஆவணங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

விக்ரம் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து, அந்த குரங்கு எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறித்து விசாரணை தொடங்கியது. முதற்கட்ட விசாரணையில், ஈரோடு பெருந்துறையில் உள்ள பண்ணையில் இருந்து குரங்கு பெறப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அந்த பண்ணையில் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு லார் கிப்பன் குரங்குகள் மட்டுமின்றி, பல்வேறு அரிய வகை பறவைகள், பாலூட்டிகள் மற்றும் ஊர்வன வகைகளும் வளர்க்கப்பட்டு வருவது தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பண்ணையின் பதிவேடுகள் மற்றும் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களிலும் வேறுபாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மின் வயரை மிதித்து ஆறாம் வகுப்பு மாணவன் பலி... போராட்டத்தில் குதித்த உறவினர்கள்... ஈரோட்டில் பரபரப்பு..!!

மேலும், பண்ணையில் இருந்த மற்றொரு லார் கிப்பன் குரங்கு குட்டி இறந்தது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பண்ணையின் உரிமையாளர் கேசவநாதனிடம், அரிய வகை விலங்குகளை வளர்ப்பதற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வனத்துறை அவகாசம் வழங்கியிருந்தது. ஆனால், அவர் தேவையான சான்றிதழ்களை சமர்ப்பிக்காமல் முரண்பட்ட தகவல்களை அளித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், அங்கு உள்ள கிப்பன் குரங்குகளை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என கூறப்படுகிறது.

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்காமல் வனத்துறை காலம் தாழ்த்துவதாக இயற்கை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பண்ணையில் உள்ள அரிய வகை விலங்குகளின் அனுமதி, ஆவணங்கள் மற்றும் அவற்றின் இடமாற்றம் குறித்து முழுமையான விசாரணை தேவை என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், விக்ரமுக்கும் வனத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அரிய வகை லார் கிப்பன் குரங்கு தற்போது எங்கே உள்ளது, அது எவ்வாறு அவருக்கு கிடைத்தது, அதற்கான ஆவணங்கள் என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸில் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆவணங்களை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் அடுத்தகட்டமாக வனத்துறை என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதே தற்போது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், பண்ணையில் கண்டறியப்பட்டதாக கூறப்படும் மற்ற அரிய உயிரினங்களின் சட்டபூர்வ உரிமை மற்றும் ஆவணங்கள் குறித்த விசாரணையும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: ஆகஸ்ட் 17ல் 100 நாள் நிறைவு! விஜய் அரசு செய்தது என்ன? அதிகாரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share