×
 
☰

வெளிநாடு போவோருக்கு Vi அதிரடி சலுகை: 170 நாடுகளில் சர்வதேச ரோமிங் இலவசம்!

இந்தியப் பயனர்களுக்கு 170-க்கும் மேற்பட்ட நாடுகளில் இலவச சர்வதேச ரோமிங் அம்சத்தை ஆண்டுக்கு 3 முறை வழங்கும் புதிய சலுகையை வோடபோன் ஐடியா அறிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள தனது வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணமின்றி வெளிநாடுகளில் தங்களது செல்போன் இணைப்பைப் பயன்படுத்தும் வகையில், 170-க்கும் மேற்பட்ட நாடுகளில் செல்லுபடியாகும் இலவச சர்வதேச ரோமிங் (Free International Roaming) சேவையை வோடஃபோன் ஐடியா (Vi) நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

பொதுவாக இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சுற்றுலா அல்லது வர்த்தக நிமித்தமாகப் பயணிக்கும் பயணிகள், வெளிநாடுகளில் இணையம் மற்றும் அழைப்பு வசதிகளைப் பெறுவதற்காகத் தனியாக அதிக கட்டணம் செலுத்தி ரோமிங் திட்டங்களை வாங்க வேண்டியோ அல்லது வெளிநாட்டு விமான நிலையங்களில் புதிய உள்ளூர் சிம் கார்டுகளையோ, இ-சிம்களையோ வாங்க வேண்டிய கட்டாயம் நிலவி வந்தது. இதனால் இந்திய எண்களுக்கு வரும் வங்கி ஓடிபி மற்றும் முக்கிய அவசர அழைப்புகளைப் பெறுவதில் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். இத்தகைய நடைமுறைச் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தொலைத்தொடர்பு நிறுவனமான வி இந்த அதிரடித் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது.

வோடஃபோன் ஐடியா நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தகுதியுடைய குறிப்பிட்ட போஸ்ட்பெய்டு கட்டணத் திட்டங்கள், வருடாந்திர வரம்பற்ற ப்ரீபெய்டு திட்டங்கள் மற்றும் நிறுவனங்களுக்கான என்டர்பிரைஸ் திட்டங்களில் இந்த இலவச சர்வதேச ரோமிங் நன்மை இணைக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகையின் கீழ், பயனர்கள் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி ஆண்டிற்கு மூன்று முறை வரை வெளிநாட்டுப் பயணங்களின் போது இலவச சர்வதேச ரோமிங் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஆண்டுக்குச் சராசரியாக ₹9,000 வரை சேமிக்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: அமெரிக்க மிரட்டலுக்கு பணிய மாட்டோம்: வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்தியா உறுதி!

இந்த இலவச ரோமிங் திட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் உள்ள 170-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயணம் செய்யும் போது, இந்திய எண்களுக்கே அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் மொபைல் டேட்டா வசதிகளைப் பெற முடியும். இத்திட்டத்தைப் பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்கள், தங்களது பயணத்திற்கு முன்பாக வி மொபைல் செயலி வாயிலாகத் தங்களது திட்டம் தகுதி பெற்றுள்ளதா என்பதைச் சரிபார்த்து, இலவச சர்வதேச ரோமிங் வசதியை எளிதாகச் செயல்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டெல்லியில் நிருபர் கேள்விக்கு சரளமாக இந்தியில் பதிலளித்த ரஷ்ய அதிகாரி பீட்டர் ஸ்வெஷ்னிகோவ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share