இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..! சென்னையில் 28.30 லட்சம் வாக்காளர்கள்..!! முழு விவரம்..!!
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் சென்னையை பொருத்தவரை 28.30 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழகம் முழுவதற்குமான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. இது வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக மிக முக்கியமான படியாகும். தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெரிய முயற்சியின் இறுதிக் கட்டமாக இது அமைகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை தமிழகத்தில் சுமார் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். ஆனால் SIR திருத்தப் பணிகள் தொடங்கிய பிறகு, நவம்பர் 4-ம் தேதி முதல் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. டிசம்பர் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டபோது, அதில் சுமார் 5.43 கோடி பேர்தான் இடம்பெற்றிருந்தனர்.
அதாவது, கிட்டத்தட்ட 97 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. இதில் பலர் இறந்தவர்கள், இடமாறியவர்கள், இரட்டைப் பதிவு உள்ளவர்கள், ஆதார் அல்லது ஆவணங்கள் இல்லாதவர்கள் போன்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என கூறப்பட்டது. வரைவு பட்டியல் வெளியான பிறகு, டிசம்பர் 19 முதல் பிப்ரவரி 10 வரை மக்களுக்கு உரிமைகோரல் மற்றும் ஆட்சேபனை தெரிவிக்கும் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. லட்சக்கணக்கானோர் தங்கள் பெயரைச் சேர்க்கவோ, திருத்தவோ, தவறாக நீக்கப்பட்டதை மீட்டெடுக்கவோ விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் மாவட்ட அளவிலான தேர்தல் பதிவு அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு, தேவையான ஆவணங்கள், சுய உறுதிமொழி போன்றவை ஆய்வு செய்யப்பட்டன.
இப்போது அந்த அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில், இன்று தமிழக முழுவதற்குமான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தை பொருத்தவரை 16 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 28 லட்சத்து 30 ஆயிரத்து 936 வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை மாவட்டத்தில் 14 லட்சத்து 64 ஆயிரத்து 344 ஆண் வாக்காளர்கள் இருப்பதாகவும், 14 லட்சத்து 64 ஆயிரத்து 344 பின் வாக்காளர்கள் இருப்பதாகவும் மூன்றாம் பாலினத்தவர் 829 பேர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! தமிழகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..!!
4,078 வாக்குச்சாவடிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு முன்பு 40,04,694 வாக்காளர்கள் இருந்ததாகவும் தற்போது 28 லட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஆண் வாக்காளர்கள் கூடுதலாக 1,18,073 என்றும் புதிய பெண் வாக்காளர்கள் கூடுதலாக 1,33,101 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக பெரம்பூர் தொகுதியில் வாக்காளர்கள் இருப்பதாகவும், துறைமுகம் தொகுதியில் குறைந்தபட்சமாக வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புதுவையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு...! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!