ஒத்தைக்கு ஒத்தை மோதிக்கிற மாதிரி ஆகிடும்! ஜாக்கிரதை! தைவான் விஷயத்தில் அமெரிக்காவுக்கு சீனா வார்னிங்!
''அமெரிக்கா - சீனா இடையேயான உறவு சுமுகமாக இருக்க வேண்டும்; அதில் குழப்பத்தை ஏற்படுத்தி விடக் கூடாது,'' என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடனான சந்திப்பில் சீன அதிபர் ஷீ ஜின்பிங் குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனாவுக்கு மூன்று நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், சீன அதிபர் ஷீ ஜின்பிங் உடன் நேற்று முக்கிய சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது தைவான் விவகாரத்தில் அமெரிக்கா கவனமாக நடந்துகொள்ள வேண்டும் என ஜின்பிங் கடுமையாக எச்சரித்துள்ளார்.
“அமெரிக்கா - சீனா இடையேயான உறவு சுமுகமாக இருக்க வேண்டும். அதில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது” என்று ஜின்பிங் வலியுறுத்தினார். தைவான் விவகாரத்தை அமெரிக்கா சரியாகக் கையாளாவிட்டால், இரு நாடுகளும் நேருக்கு நேர் மோதும் சூழல் ஏற்படும் என்றும் அவர் பகிரங்கமாக எச்சரித்தார். தைவான் என்பது சீனாவுக்கு மிக முக்கியமான மற்றும் உணர்ச்சிகரமான விவகாரம் என்று குறிப்பிட்ட ஜின்பிங், “தவறான அணுகுமுறை இரு நாட்டு உறவையும் பேராபத்தில் தள்ளும்” என்றார்.
மேற்காசியப் போர் பதற்றத்துக்கு மத்தியில் சீனா சென்ற டிரம்புக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பீஜிங்கில் உள்ள ‘கிரேட் ஹால் ஆப் தி பீப்பிள்’ வளாகத்தில் இரு தலைவர்களும் சந்தித்துப் பேசினர். வர்த்தகம், ஈரான் விவகாரம் உள்ளிட்ட பல முக்கிய தலைப்புகளில் விரிவான விவாதம் நடைபெற்றது.
இதையும் படிங்க: முதல்வர் ஆவதற்கு முன்பே விஜய் எதிர்த்த பரந்தூர் ஏர்போர்ட் திட்டம்!! அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை!
இருப்பினும், டிரம்ப் சந்திப்பின்போது நேர்மறையான கருத்துகளைத் தெரிவித்தார். “ஷீ ஜின்பிங் ஒரு சிறந்த தலைவர். சீனா மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. வர்த்தக ரீதியாக நாம் பிரமாண்டமான எதிர்காலத்தை நோக்கி செல்கிறோம். இது வரலாற்றில் மிகப் பெரிய உச்சி மாநாடு” என்று டிரம்ப் புகழ்ந்து பேசினார். இரு நாடுகளும் கூட்டாளிகளாக செயல்பட்டால் பல சாதனைகளைப் படைக்கலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஷீ ஜின்பிங் தரப்பில், “அமெரிக்காவும் சீனாவும் போட்டி போட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் வீழ்த்த முயற்சிப்பதை நிறுத்த வேண்டும். இருவரும் கூட்டாளிகளாகச் செயல்பட்டால் மட்டுமே நல்லது” என்று வலியுறுத்தினார்.
இந்த உயர்மட்ட சந்திப்பு உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஜின்பிங்கின் தைவான் எச்சரிக்கை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்க, தைவான் பிரச்சினை மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இரு பெரும் பொருளாதார வல்லரசுகளின் உறவு உலகப் பொருளாதாரத்தையே பாதிக்கும் என்பதால், இந்த சந்திப்பின் முடிவுகள் உலக நாடுகள் அனைத்தும் உற்று நோக்கி வருகின்றன.
இதையும் படிங்க: முகமூடி நபர் யார்? ... விஜயை விடாமல் விரட்டும் பிரேமலதா விஜயகாந்த்... திமுகவுக்கே டப் கொடுக்கும் தேமுதிக...!