×
 

600 ட்ரோன்கள்.. உக்ரைனை உருக்குலைத்த ரஷ்யா.. காய் நகர்த்த காத்திருக்கும் ஜெலன்ஸ்கி..!

உக்ரைன் மீது நேற்று ஒரே நாளில், 620 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

1991இல் சோவியத் ஒன்றியம் சிதறிய பின்னர், உக்ரைன் சுதந்திரமடைந்தது, ஆனால் ரஷ்யா அதை தனது செல்வாக்கு வட்டத்திற்குள் வைத்திருக்க விரும்பியது. உக்ரைனின் மேற்கத்திய நாடுகளுடனான நெருக்கம், குறிப்பாக நேட்டோவில் இணைவதற்கான முயற்சிகள், ரஷ்யாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டது. மேலும், கிழக்கு உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறி, ரஷ்யா 2014இல் கிரிமியாவை ஆக்கிரமித்து, டான்பாஸ் பகுதியில் பிரிவினைவாதப் போரை ஆதரித்தது. 

உக்ரைன்-ரஷ்யா போர் 2014இல் கிரிமியாவை ரஷ்யா ஆக்கிரமித்ததில் தொடங்கி, 2022 பிப்ரவரி 24இல் முழு அளவிலான படையெடுப்புடன் உச்சத்தை அடைந்தது. இதன் முக்கிய காரணம், உக்ரைனின் நேட்டோ (NATO) உறுப்பினர் ஆகும் முயற்சிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் காட்டும் கடும் எதிர்ப்பு தான்.

புதின், நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தை ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதுகிறார். 1994 புடாபெஸ்ட் ஒப்பந்தத்தில், உக்ரைனின் இறையாண்மையை மதிப்பதாக ரஷ்யா உறுதியளித்திருந்தாலும், 2014இல் கிரிமியாவை ஆக்கிரமித்து, டான்பாஸ் பகுதியில் பிரிவினைவாதத்தை ஆதரித்தது. 2022இல், உக்ரைனை "டி-நாஜிஃபிகேஷன்" செய்யவும், நேட்டோவை தடுக்கவும் என்ற பெயரில் புதின் முழு அளவிலான படையெடுப்பை தொடங்கினார், இது உக்ரைனின் இறையாண்மைக்கு எதிரானதாகக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க: புடின்னால என் சந்தோஷமே போச்சு.. விரக்தியில் உக்ரைனுக்கு கொம்பு சீவி விடும் டிரம்ப்..!

தற்போது இந்தப் போர் 1,270 நாட்களுக்கு மேல் (3.5 ஆண்டுகள்) நீடிக்கிறது. இதில் உக்ரைனின் 18-20% நிலப்பரப்பு, கிரிமியா மற்றும் டான்பாஸ் உள்ளிட்டவை, ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. சேதங்கள் மிகவும் பயங்கரமானவை. பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்களும், 40,000-த்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்.

37 லட்சம் உக்ரைனியர்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தனர், 69 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தப்பினர். உக்ரைனின் மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன, இது உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடிகளை தூண்டியது. 

ரஷ்யாவும் பொருளாதார தடைகளால் பாதிக்கப்பட்டு, 315,000 வீரர்கள் இழப்பு மற்றும் $211 பில்லியன் செலவை சந்தித்தது.உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் நாடுகளில் அமெரிக்கா முதன்மையானது, 2022-2025 இடையே 65 பில்லியன் யூரோக்கள் இராணுவ உதவியாக வழங்கியது. ஐரோப்பிய நேட்டோ நாடுகள் 72 பில்லியன் யூரோக்கள் உதவி செய்தன. பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், மற்றும் போலந்து ஆயுதங்கள், பயிற்சி, மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கின.

நேட்டோவின் NSATU திட்டம் உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் பயிற்சியை ஒருங்கிணைக்கிறது. புதினின் ஆக்கிரமிப்பு நோக்கங்களை எதிர்க்க, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து, நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் ஆகும் முயற்சிகளை தீவிரப்படுத்தினார். 

புதின், உக்ரைனின் ஜனநாயகத்தை அழித்து, அதை ரஷ்ய செல்வாக்கிற்குள் கொண்டுவர முயல்கிறார், ஆனால் ஜெலன்ஸ்கியின் எதிர்ப்பு மற்றும் அவருக்கான மக்கள் ஆதரவு இதை தடுத்து வருகிறது. ஜூலை 9-10 அன்று, ரஷ்யா 728 ட்ரோன்கள் மற்றும் 13 ஏவுகணைகளை உக்ரைன் மீது ஏவியது, இது இதுவரை மிகப்பெரிய தாக்குதலாகும்.

கீவ், லுட்ஸ்க், மற்றும் மேற்கு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன, இருவர் உயிரிழந்தனர். உக்ரைனும் எதிர்-தாக்குதல்களை மேற்கொண்டு, சுமி பகுதியில் ரஷ்ய முன்னேற்றத்தை தடுத்தது. இந்த தாக்குதல்கள், அமெரிக்க அதிபர் டிரம்பின் அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தின. 

புதினின் தொடர் தாக்குதல்கள், ஜெலன்ஸ்கியின் உறுதியான எதிர்ப்பு, மற்றும் மேற்கத்திய ஆதரவு இந்த மோதலை தொடர்ந்து சிக்கலாக்கி வருகிறது. இந்த நிலையில் ரஷ்யா நேற்று இரவு, கார்கில் மற்றும் சுமி பகுதிகளில் இருந்து உக்ரைனின் லிவிவ் மற்றும் புகோவ்ய்னா பகுதிகள் மீது கடுமையாக தாக்கியது. 26 ஏவுகணைகள் மற்றம் 597 ட்ரோன்கள் வீசப்பட்டன. இதில் 20 ஏவுகணைகள் மற்றும் பல ட்ரோன்கள் அழிக்கப்பட்டன. இதற்காக உக்ரைன் வான் பாதுகாப்பு படையினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஜெலான்ஸ்கி தெரிவித்தார். 

ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்காக அந்நாடு மீது இன்னும் அதிக தடைகளை விதிக்க வேண்டும். ரஷ்யாவுக்கு ட்ரோன் வழங்குபவர்களையும், கச்ச எண்ணெயால் லாபம் அடையும் நாடுகள் மீது தடை விதிக்க வேண்டும். ட்ரோன்களை இடைமறிக்க இன்னும் முதலீடும், வான் பாதுகாப்பு அமைப்பும் தேவைப்படுகிறது. பலம் மூலம் மட்டுமே இந்த போர் நிறுத்த முடியும். வெறும் சமிஞ்கைகள் மட்டும் கூடாது. மக்களை பாதுகாக்கும் நடவடிக்கை தேவை என்றும் ஜெலான்ஸ்கி கூறினார்.

இதையும் படிங்க: பள்ளி மாணவிகள் குழந்தை பெற்றால் லட்ச ரூபாய் சன்மானம்.. மதர் ஹீரோயின் விருது.. ரஷ்யாவில் பகீர்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share