மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் ரஷ்யா?! உக்ரைனுக்கு ஆயுத உதவி கேட்டு ஜெலன்ஸ்கி அவசர அழைப்பு!
உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களை வழங்கக்கூடிய அனைத்து நாடுகளின் ஆதரவும் முக்கியமானது என குறிப்பிட்ட ஜெலன்ஸ்கி, தற்போதைய சூழலில் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றார்.
கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா பெரிய அளவிலான தாக்குதலை நடத்த தயாராகி வருவதாக புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதையடுத்து, தற்காப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த நட்பு நாடுகள் அவசரமாக உதவ வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இந்த பேச்சுவார்த்தை ஐக்கிய அரபு அமீரகம் அல்லது அமெரிக்கா பரிந்துரைக்கும் வேறு நாட்டில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், ஜெலன்ஸ்கி வெளியிட்ட வீடியோவில், ரஷ்யா பெரிய தாக்குதலுக்கு தயாராகி வருவது தொடர்பாக புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். உக்ரைன் மக்கள் தங்களது பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ரஷ்யா-உக்ரைன் போர்: களத்தில் இறங்கிய இந்தியா! புடின், ஜெலன்ஸ்கியுடன் அடுத்தடுத்து பேச்சு!
ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள உக்ரைன் ராணுவமும் விமானப்படையும் தயாராக இருப்பதாக தெரிவித்த ஜெலன்ஸ்கி, நாட்டின் தற்காப்பு திறனை மேம்படுத்துவதற்கு சர்வதேச நாடுகளின் உதவி மிகவும் அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, ரஷ்யாவிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் தீவிர வான்வழி மற்றும் ஏவுகணை தாக்குதல்களை எதிர்கொள்ள தேவையான பாதுகாப்பு ஆயுதங்கள் உடனடியாக தேவைப்படுவதாக அவர் கூறியுள்ளார். உக்ரைனின் நகரங்கள் மற்றும் முக்கிய கட்டமைப்புகளை பாதுகாப்பதற்கு நட்பு நாடுகள் தங்களால் முடிந்த உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களை வழங்கக்கூடிய அனைத்து நாடுகளின் ஆதரவும் முக்கியமானது என குறிப்பிட்ட ஜெலன்ஸ்கி, தற்போதைய சூழலில் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றார்.
ஒருபுறம் போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் புதிய தாக்குதல் குறித்த எச்சரிக்கையை உக்ரைன் வெளியிட்டுள்ளது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜெலன்ஸ்கியின் எச்சரிக்கையை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இதையும் படிங்க: உக்ரைன் போருக்கு நடுவே ரஷ்ய தேர்தல்! புடின் கட்சிக்கு மீண்டும் மக்கள் ஆதரவு? 57.5% வாக்குகளுடன் முன்னிலை!!