பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியம், உடல்நலனுக்காக மதிய உணவில் முட்டை வழங்கப்படுகிறது, தானிய உணவுகளும் வழங்கப்படுகின்றன. இதற்காக ஒதுக்கப்படும் ரூ.50 கோடி நிதியை மகாராஷ்டிரா அரசு திரும்பப் பெற்றுள்ளது. மகாராஷ்டிரா அரசு கடந்த மாதம் 28ம் தேதி வெளியிட்ட தீர்மானத்தில் “ பள்ளிக் குழந்தைகளுக்கு மதியஉணவில் வழங்கப்படும் முட்டைக்குப் பதிலாக முட்டை புலாவ் மற்றும் இனிப்பு கிச்சடி அல்லது நாச்சினி சத்யா வழங்கப்படும்.
இரு உணவுளையும் குழந்தைகளுக்கு வழங்க நிர்வாகம் முயல வேண்டும். இதில் இனிப்புவகைகளுக்கு தேவையான நிதியை வெளியே இருந்து பெற்றுக்கொள்ளலாம், கூடுதலாக நிதியை அரசு வழங்காது” எனத் தெரிவித்துள்ளது. 2024-25ம் நிதியாண்டுக்கான மகாராஷ்டிரா அரசு பட்ஜெட்டை ஆய்வு செய்தால், பிரதம மந்திரி போஷான் சக்தி நிர்மான் திட்டத்தின் கீழ் ரூ.6.12 லட்சம் கோடியில் 0.04% சதவீதம் மட்டுமே செலவு செய்துள்ளது.

இந்த போஷான் திட்டம் என்பது பள்ளிக் குழந்தைகள் சத்துள்ள உணவுகளை வழங்கும் திட்டமாகும்.
பிரதமர் போஷான் திட்டத்தை மகாராஷ்டிரா அரசு மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்துகிறது, ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே இந்தத் திட்டத்துக்கு செலவிட்டுள்ளது. அந்தத் தொகையும் இப்போது குறைக்கப்பட்டுள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013ன் கீழ், தொடக்கப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் தினசரி 12 கிராம் புரோட்டீன் உணவும், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலையில் படிக்கும் மாணவர்கள் தினசரி குறைந்தபட்சம் 20 கிராம் புரோட்டீன் உணவு எடுக்க வலியுறுத்துகிறது.
இதையும் படிங்க: ரயில்வே தண்டவாளத்தில் பகீர்... கண் இமைக்கும் நேரத்தில் நடந்த பரபர சம்பவம்... குளித்தலையில் நடந்தது என்ன?
பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் முட்டை, சத்துள்ள பருப்பு வகைகள் மூலம் குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைக்கப்பெற்று பள்ளிக்கும் தொடர்ந்து வருவார்கள், உடல்ஆரோக்கியமும் மேம்படும். இந்தத் திட்டம் பின்னர் பிரதமர் போஷான் திட்டத்தோடு இணைக்கப்பட்டு மத்திய அரசு குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டத்தில் 60 சதவீதம் நிதியை வழங்கியது, மீதமுள்ள 40 சதவீத நிதியை மாநில அரசுகள் வழங்கிக்கொள்ளலாம் என அறவித்தது. இதில் 16 மாநிலங்கள் குழந்தைகளுக்கு மதிய உணவில் முட்டை வழங்குகின்றன.

மகாராஷ்டிராவில் இந்த திட்டம் மாநிலத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டுவரப்பட்டும், 2023, நவம்பர் மாதத்தில் இருந்துதான் பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவில் முட்டை சேர்க்கப்படுகிறது. அதிலும் ஓர் ஆண்டுக்குள், இந்தத் திட்டத்துக்கான நிதியையும் நிறுத்திவிட்டது மாநில அரசு. மாகாரஷ்டிரா அரசின் நிதிப்பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது, இதைக் குறைக்கும் வகையில் செலவு குறைப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக குழந்தைகளுக்கான முட்டை வழங்கும் நிதியை ரத்து செய்துள்ளது என பிஆர்எஸ் சட்ட ஆய்வு தெரிவித்துள்ளது.
2022-23ம் ஆண்டில் மகாராஷ்டிரா அரசின் நிதிப்பற்றாக்குறை மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9% இருக்கிறது. அண்ணா அதிகார் அபியான் எனும் தொண்டு நிறுவனம், குழந்தைகளின் சத்துக்குறைபாடு, உணவு ஆகியவற்றுக்காக செயல்பட்டு வருகிறது.அந்த நிறுவனம் கூறுகையில் “ நிதிச் சிக்கல், நிதிப்பற்றாக்குறையை குறைக்க குழந்தைகளுக்கான சத்துள்ள உணவு விஷத்தில் எடுத்த முடிவு ஏற்க முடியாதது. வசதியான மாநில அரசு இதுபோன்று செய்யக்கூடாது” எனத் தெரிவித்துள்ளது.

நிதிஆயோக்கின் புள்ளிவிவரங்கள் படி, மகாராஷ்டிராவில் குழந்தைகளின் ஊட்டச்சத்து சூழல் என்பது 5 வயதுக்கு கீழ்பட்ட குழந்தைகளில் 35 சதவீதம் பேர் வயதுக்குஉரிய எடைக்கும் குறைவாக இருக்கிறார்கள். 2015-16ம் ஆண்டிலிருந்து இதே நிலைதான் அந்த மாநிலத்தில் நீடிக்கிறது. மகாராஷ்டிராவில் ஏழைகளின் வீடுகளில் முட்டைகள் வாங்கி குழந்தைகளுக்கு சமைத்துக் கொடுப்பது என்பது பெரிய செலவாகக் கருதப்படுகிறது.
குறிப்பாக இப்போது நிலவும் பணவீக்க சூழலில் முட்டை என்பது காஸ்ட்லியாக இருக்கிறது. 2023 நவம்பர் முதல் 2024 டிசம்பர் வரை உணவுவிலை பணவீக்கம் 8 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா அரசு பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கும் மதிய உணவில் சேர்க்கப்படும் முட்டைக்கு வழங்கும் நிதியை நிறுத்தியதற்கு சிவசேனா உத்தவ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

ஆதித்யா தாக்கரே கூறுகையில் “ பெரும்பாலான மாணவர்களுக்கு மதிய உணவுதான் ஊட்டத்து உணவு. அதிலும் கை வைக்கிறது பாஜக அரசு. இதன் மூலம் பேராசை பிடித்த அரசியல்வாதிகளால் அரசு நடத்தப்படுகிறது என்பது தெரகிறது. மக்கள் இதில் பாதிக்கப்படமாட்டார்கள், வாக்களிக்காத, குரல் இல்லாத குழந்தைகள்தான் பாதிக்கப்படுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 7 ஆயிரம் பெண்கள், மகா கும்ப மேளாவில் துறவறம் பூண்டனர்; பெரும்பான்மையினர் பட்டதாரிகள்