×
 

மேற்கு ஆசிய போரால் சோகம்... 10 மாலுமிகள் உட்பட 16 இந்தியர்கள் உயிரிழப்பு; பாராளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

''மேற்கு ஆசியாவில் அமெரிக்க-ஈரான் போரில் 10 மாலுமிகள் உட்பட இந்தியர்கள் 16 பேர் உயிரிழந்தனர் '' என பார்லிமென்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் மோதல்களின் தாக்கம் இந்தியர்களையும் பாதித்துள்ளதாக மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான பதற்றம் தீவிரமடைந்த பிறகு, 10 மாலுமிகள் உட்பட மொத்தம் 16 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளார்.

மேற்கு ஆசிய நாடுகளில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் வெளியேற்றப்பட்ட இந்தியர்கள் தொடர்பான விவரங்களை கோரி எம்.பி. ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து இந்தியர்கள் உயிரிழந்ததும், பலர் காயமடைந்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சர் வழங்கிய தகவலின்படி, உயிரிழந்தவர்களில் சவுதி அரேபியாவில் ஒருவர், குவைத்தில் இருவர், ஓமனில் எட்டு பேர், ஈராக்கில் ஒருவர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நான்கு பேர் அடங்குகின்றனர். மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 32 பேர், ஓமனில் 24 பேர், குவைத்தில் 13 பேர், கத்தாரில் நான்கு பேர், சவுதி அரேபியாவில் ஒருவர் மற்றும் இஸ்ரேலில் ஒருவர் என மொத்தம் 75 இந்தியர்கள் காயமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: வொர்க் ஃப்ரம் ஹோம் ஓவர்! ஆபிஸ் வாங்க! டெல்லியில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் உத்தரவு வாபஸ்!

அதேநேரத்தில், கத்தாரின் ராஸ் லபான் எரிவாயு நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 12 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம், போர் தொடர்புடையது அல்ல என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

உயிரிழந்த இந்தியர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்திய தூதரகங்கள் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், உடல்களை விரைவாக இந்தியா கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களின் சிகிச்சை நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதுடன், அவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பு வைத்தும் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், 2026 பிப்ரவரி முதல் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலைக்குப் பிறகு, டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் வழியாக 2,557 இந்தியர்களை பாதுகாப்பாக தாயகம் திரும்பச் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாணவர்கள், தொழிலாளர்கள், மாலுமிகள் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட சுமார் 7,000 இந்தியர்கள் இன்னும் ஈரானில் தங்கி இருப்பதாகவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஈரான் போர் எதிரொலி! அதல பாதாளத்தில் சரிந்த செல்வாக்கு! அமெரிக்க மக்களின் அதிருப்தியால் அதிபர் ட்ரம்ப் அதிர்ச்சி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share