×
 

இனி ஓடவும் முடியாது..! ஒளியவும் முடியாது..! சுத்துப்போட்ட ராணுவம்.. காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது..!

காஷ்மிரில் பதுங்கி உள்ள பயங்கரவாதிகளை இந்திய ராணுவத்தினர் சல்லடை போட்டு தேடி வரும் நிலையில் 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22ம் தேதி இந்திய ராணுவனத்தினர் போல் சீருடை அணிந்து வந்த பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 26 பேர் இறந்தனர். 17 பேர் காயமடைந்தனர். இந்த துயர சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ட் ஃபோர்ஸ் என்ற பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்று உள்ளது. உலக தலைவர்கள் உள்பட பலரும் தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். இதனை அடுத்து, பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. 

பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் என முக்கிய பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி வருகிறார். பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டியுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். இதனிடையே பஹல்காம் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த என்ஐஏ அதிகாரிகள் அடங்கிய குழு காஷ்மீர் விரைந்தது. என்.ஐ.ஏ.வின் ஐ.ஜி., டி.ஐ.ஜி., போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் கண்காணிப்பில் பல்வேறு என்.ஐ.ஏ. குழுக்கள் விசாரணையில் ஈடுபட்டுள்ளன. 

இதையும் படிங்க: முஸ்லிம்களை குறிவைக்காதீர்கள்.! கடற்படை அதிகாரி மனைவியின் பேச்சால் சர்ச்சை..!

பயங்கரவாதிகளின் ஊடுருவல், அவர்கள் தீட்டிய சதித்திட்டம், பதுங்கியிருக்கும் இடம் குறித்து ராணுவத்தினருடன் என்ஐஏ அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். பைசரன் பசுமை பள்ளத்தாக்கின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் சல்லடை போட்டு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடமும், பலியானவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து தகவல்களை திரட்ட பல்வேறு என்.ஐ.ஏ. குழுக்கள் நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. 

பஹல்காமில் தாக்குதல் நடத்துவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தீவிரவாதிகள் காஷ்மீர் வனப்பகுதிக்குள் பதுங்கி இருந்து 4 இடங்களில் உளவு பார்த்து வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் நான்கு பயங்கரவாதிகள் இரு குழுக்களாக பிரிந்து இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அரங்கேற்றியது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் தற்போதும், தெற்கு காஷ்மீரில் தங்கியிருப்பதாக என்.ஐ.ஏ. அதிர்ச்சி தகவல் அளித்துள்ளது. 

பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் இன்னும் பைசரன் பள்ளதாக்கில் பதுங்கி உள்ளனர். அவர்கள் உணவு, உடையை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அவர்கள் சேட்டிலைட் போன் அல்லது டிரான்ஸ்மிட்டர்களை பயன்படுத்த வாய்ப்புள்ளதாகவும் என்.ஐ.ஏ அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து பஹல்காமின் 3டி மேப்பிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அவர்களை தேடும் பணியில் ராணுவத்தினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று பட்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அதேபோல், நேற்று பூஞ்ச் மாவட்டத்தின் சுரன்கோட் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடம் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது. அந்த இடத்தில் 5 வெடிகுண்டுகளும், 2 ரேடியோ செட்களும், 3 போர்வைகளும் கண்டெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல் எதிரொலி: காஷ்மீரில் 48 சுற்றுலாத் தளங்கள் மூடல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share