×
 

வரலாற்று சாதனை! - 2027ல் இந்தியாவில் முழுமையான டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு!

இந்தியாவில் வரும் 2027- ஆம் ஆண்டு நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும் என்று உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 2027-ஆம் ஆண்டு முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு நடத்தப்படும் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார். இந்தக் கணக்கெடுப்பு செல்போன் செயலி மூலம் தரவுகளைச் சேகரிப்பது உள்ளிட்ட நவீன அம்சங்களுடன் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்தியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு, 2021-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட இருந்த நிலையில், 2019-இல் தொடங்கிய கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாகக் கணக்கெடுப்பு நடத்த முடியாமல் போனது. இந்த நிலையில், 2027-இல் நவீன தொழில்நுட்பத்துடன் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

2027-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் பின்வரும் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை வீடுகளின் பட்டியல், வீடுகளின் வரைபடம் ஆகியவை சேகரிக்கப்படும். இதைத் தொடர்ந்து, 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மாதங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

இதையும் படிங்க: கூடங்குளம் அணு உலை ஆபத்து: பெட்ரோலை வைத்து கொள்ளை; மத்திய அரசை அட்டாக் செய்த சபாநாயகர் அப்பாவு!

இந்தக் கணக்கெடுப்பில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அம்சம் இடம்பெற உள்ளது. கடந்த 1931-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, பட்டியல் இனச் சமுதாயம் மற்றும் பட்டியல் இனப் பழங்குடியினர் மட்டுமின்றி அனைத்துச் சமுதாயங்களுக்கும் சாதி கணக்கீடு உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட உள்ளது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு டிஜிட்டல் மயமாக்கப்படுவதால் பின்வரும் முக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று அமைச்சர் நித்யானந்த் ராய் குறிப்பிட்டுள்ளார்.  தரவு பதிவேற்றம் குறைந்தது 10 நாட்களிலும், இறுதி அட்டவணைப்படுத்தப்பட்ட தரவு 6 முதல் 9 மாதங்களுக்குள்ளும் சுலபமாக முடிக்கப்படலாம். இதன் மூலம், முடிவுகளை வெளியிட எடுத்துக் கொள்ளும் காலம் குறையும். உள் அமைக்கப்பட்ட சரிபார்ப்புகள், முன் குறியிடப்பட்ட பதவி விருப்பங்கள், கட்டாய புவி குறியீடுதல் மற்றும் வீடுகள் சுயமாகக் கணக்கிடும் திறன் ஆகியவை தவறுகள் நிகழ்வதைக் கணிசமாகக் குறைக்கும்.

2029 நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் மற்றும் நிதி மற்றும் நலத் திட்டங்களில் மிகவும் துல்லியமான ஒதுக்கீடு போன்ற முக்கியமான முடிவுகளில் 2027 புள்ளிவிவரங்கள் மிகவும் பயனுள்ளதாக அமையும். புலம்பெயர்ந்த மற்றும் கிராமப்புற மக்களிடையே இடப்பெயர்வு முறைகளைத் துல்லியமாகக் கண்காணிப்பது நகர்ப்புறத் திட்டமிடல் மற்றும் வள விநியோகத்தையும் மேம்படுத்த வாய்ப்புள்ளது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்காக அரசு டேப்லெட்டுகளைக் கொள்முதல் செய்வதற்கான தேவை இல்லாமல் போகிறது. இதனால், பல கோடி ரூபாய் சேமிக்கப்படுகிறது. மொத்தத்தில், டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பல்வேறு நன்மைகளை வழங்கும் வகையில் அமைந்துள்ளது என்று உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை: இண்டிகோ நெருக்கடியால் அதிக கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share